பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 O அ. ச. ஞானசம்பந்தன்


மன்னனுடைய கேள்வி, யோகத்தில் அமர்ந்திருக்கும் பட்டரின் காதுகளில் அரைகுறையாய் விழுந்தது. அபிராமித் தேவியின் திருமுக மண்டலத்தை ஒயாது சிந்தித்துக் கொண்டிருக்கும் பட்டர் உடனே, “இன்று சுத்த பூர்ணிமை," என்று கூறினார். இதைக் கேட்ட மன்னன், "ஐயா, இன்று அமாவாசை ஆதலால் நான் கடலாடச் செல்கிறேன். நீர் நினைக்கிறபடி இன்று சுத்த பூர்ணிமையாக இல்லாவிட்டால், என்னுடைய கோபம் உம்மைத் தண்டிக்கும்!” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான். அரசன் சென்ற பிறகு, அரசன் ஆணைக்கு அஞ்சி அழுது கொண்டு பொழுதைக் கழிக்கவில்லை பட்டர். அரசர்களுக்கெல்லாம் அரசியான இறைவியினது பற்றுக் காரணமாக நடந்த ஒன்றுக்கு, அவர் ஏன் வருந்த வேண்டும்?

அமாவாசைத் தினத்தில் முழுச் சந்திரனை நினைக்கு மாறு செய்தது எது? "உதிக்கின்ற செங்கதிர்" போன்ற இறைவியின் திருமுக மண்டலந்தானே சந்திரனை அவருக்கு நினைவூட்டிற்று? எனவே, தம்முடைய சொற் களில் நேர்ந்த பிழைக்குத் தாம் முழுப் பொறுப்பாளரல்லர் என்பதை உணர்ந்த பட்டர், அந்த அபிராமியின் மேல் ‘அபிராமி அந்தாதி' என்ற அழகிய பாமாலையைப் புனைந்தார். என்ன அதிசயம்! காவிரிப்பூம்பட்டினத்தில் இரவுப் பொழுதைக் கழித்த சரபோஜி மன்னன் நீலக் கடலின் கிழக்கு முகட்டில் முழுச் சந்திரன் தோன்றும் அற்புதத்தைக் கண்டான்! இது அபிராமி பட்டருக்காக அபிராமித்தாய் விளைத்த அற்புதம் என்ற பேருண்மையை உணர்ந்த மன்னன், ஓடோடியும் வந்து, அவருடைய திருவடிகளிலே விழுந்து, தன் பிழை பொறுக்குமாறு வேண்டிக் கொண்டான்.

பட்டர் இத்தகைய வாழ்வை எங்ஙனம் மேற்கொள்ள முடிந்தது?