பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வீழ்ந்தேன் அவன் மார்பில்’

மரம் செறிந்த ஒர் அழகிய மலைச்சாரல்; ஆங்கே ஒரு தினைப்புனம். புனத்தின் இடையே, யானைக்கும் எட்டா உயரத்தில் அமைந்த ஒரு பரண்; பரண்மீது ஒர் இளம் பெண்; அறிவும் திருவும் அழகும் ஒருங்கே உடையவள். கவண், தட்டை முதலாம் கிளியோட்டும் கருவிகளைக் கையில் கொண்டு, தினைக் கதிர்களைத் தின்ன வரும் கிளிகளையும், குருவிகளையும் ஒட்டும் தொழில் மேற்கொண்டு வந்தவள். ஆயினும், அவள் அத் தொழிலில் கருத்தைச் செலுத்தாது, எதையோ எண்ணி ஏங்கி நிற்கின்றாள்; அந்நிலையில் ஆங்கு வந்தாள் அவள் தோழி.

தோழி ஆங்கு வருவதற்கு முன்னர், இடைவழியில் இளைஞன் ஒருவனைக் கண்டுவந்தாள். அவன் ஓர் ஆண் அழகன், வில்லும் அம்பும் கொண்டு, யானை போலும் கொடிய காட்டு விலங்குகளை வேட்டையாட வந்து,