பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#84 ↔ புலவர் கா. கோவிந்தன்

மரத்தால் பாவை பண்ணி, வனப்புடன் வண்ணம் திட்டி ஆடை, அணிகளால் அழகு செய்து, அவற்றைக் கணவ னும் மனைவியுமாய் வைத்து மணம் செய்து, மணவிருந்து அளித்து ஆடி மகிழும் ஆடலை, அவரைப் போன்றே, இவளும் ஆடி மகிழ்வாள்.

அவள் ஆடி மகிழும் இவ்வாடல்களை, அவ் விளைஞன், அவற்றைக் காணும் சேய்மைக்கண், அவள் அறியாவாறு இருந்து கண்டு மகிழ்ந்தான்். அதனால், அவன் அவள்மீது கொண்ட காதல் மேலும் வளர்ந்தது. அக் காதல் வளர வளர, அவளை அடைந்து அக்காதற் பயனைத் துய்க்க முடியவில்லையே என்ற ஆற்றாமை மிக்க அவன் உள்ளம், காதல் நோயால் துடித்தது. அதனால் அவன் அறிவு நெறி பிறழ்ந்தது. செய்வன, தவிர்வன அறிய மாட்டாது தடுமாறிற்று. இவ்வுள்ளத் தடுமாற்றம், அவன் உடல் நலனைக் குலைத்தது. அவன் முகம் ஒளி குன்றிற்று.

இவ்வாறு அவள் நினைவால் வருந்தி வாடும் அவன், ஒரு நாள் அவள், தான்் இருக்கும் இடத்தைக் கடந்து செல்வதைக் கண்டான். அப்போதைய அவள் தோற்றம், அவன் ஆசையை மேலும் அதிகரிக்கச் செய்தது. காந்தள் மலர் போன்றே முன்கையில், முத்திழைத்துப் பண்ணிய பொன்தொடி அணிந்திருந்த அவள், அக்கையில் மரத்தால் பண்ணிய பாவையும் பானையும் முதலாம் விளையாட்டுப் பொருள்களை வைத்திருந்தாள். அழகாக வாரி, ஐந்து பகுதியாகப் பின்னிவிட்ட கூந்தல், அவள் பின்புறத்தே கிடந்து பேரழகு செய்தது. காலிற் கிடக்கும் சிலம்பு, கலீர் கலீர் என ஒலிக்க, மெல்ல மெல்ல அடிவைத்து நடந்து கொண்டிருந்தாள். -