பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 குறிஞ்சிமலர்

திரட்டு புத்தகத்தை அப்படியே ஒரு மாதத்தில் காப்பியடித்துத் திருடி வெளியிட்டு விட்டார். மலிவுப் பதிப்பு என்று பெயராம்! எது மலிவோ? பிழையோ? அல்லது விலையோ? தெரியவில்லை. அதனால் அவர் செய்த காரியத்துக்கு ஏற்பத்தான் புத்தகத்தின் பெயரும் வாய்த்திருக்கிறது' என்று குறும்பு பேசினான் அரவிந்தன்.

அன்று அவர்கள் இருவரும் கொல்லைப் பக்கத்துத் தாழ்வாரத்தின் அருகிலேயே படுத்துக்கொண்டார்கள். அவர்கள் படுக்கும் போது மணி ஒன்றரை இருக்கும். களைப்பும், அலுப்பும் உடல் தாங்காமல் நிறைந்திருந்தாலும் மனக் குழப்பத்தால் தூக்கம் உடனே அணுகமறுத்தது. படுக்கையில் சாய்ந்து முழங்கையை முட்டுக் கொடுத்து தலையை நிமிர்த்திக் கொண்டு முருகானந்தம் கேட்டான். "பூரணியக்காவுக்கும் இந்த அம்மாளுக்கும் என்ன உறவு? இந்த அம்மாள் யார்?"

மங்களேஸ்வரி அம்மாளைப் பற்றி பூரணியிடமிருந்து தான் தெரிந்து கொண்டிருந்தவற்றை முருகானந்தத்துக்குச் சொன்னான் அரவிந்தன்.

'இவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு இப்படியா புத்தி போக வேண்டும்? இந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கிற பையன்களும், பெண்களும் தவறு செய்யக் கூசுகிற தயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்களே அரவிந்தன், இதற்கு என்ன காரணமென்று உன்னால் சொல்லமுடியுமா? தமிழ்ப்பண்பாட்டின் உருவாய் வாழ்ந்தவருக்குப் பிள்ளையாய்ப் பிறந்து தமிழ்ப் பெண்மையின் இலட்சியம் போல் நம்மிடையே வாழும் பூரணியக்காவின் கண்காணிப்பில் வளரும் பையன் இப்படி ஆகிவிட்டானே! செல்வமும், செல்வாக்கும் நற்பண்பும் உள்ள மங்களேஸ்வரி அம்மாளின் பெண் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறாளே! குருத்துவிடும் வயதிலேயே கெட்டுப் போகத் துணியும் இத்துணிச்சல் இவர் களுக்கு எங்கே கிடைத்தது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/190&oldid=555913" இலிருந்து மீள்விக்கப்பட்டது