பக்கம்:குற்றால வளம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

உலக இயல்பு



உலக இயல்பு

உலக இயல்பு இன்னதென்பதை ஆராய்ந்தறிய வேண்டுவது இவ்வுலகிலுள்ளார்க்கு இன்றியமையாக் கடன். உலகம் மூன்றென்றும் ஏழு என்றும், ஈரேழு என்றும் பல படியாகப் பனுவல்கள் பகரா நிற்கும். அச்சங்கைகள் நமக்கு ஈண்டு வேண்டுவதின்று. நமது கண்ணுக்குக் காணப்படும் நாம் உறைகின்ற இப் பூவுலகத்தையே ஈண்டு நோக்குவோம்.


"இவ்வுலகம் எவ்வெப் பொருள்களைக் கொண்டு இலங்குகின்றது; எந்நீர்மை வாய்ந்தது” என்பவை ஆராய்தற்பாலன உலகம், புல் பூண்டு மரம் செடியாகிய தாவரப்பொருள்களையும் ஊர்வன பறப்பன நடப்பனவாகிய புழுக்கள் பறவைகள் விலங்குகளையும் மக்களையும் உடையது. உலகம், மிக நுண்ணிய அணுக்களையும் உடைத்தாயிருக்கின்றது; மிகப் பெரிய மலைகளையும் பெற்றிருக்கின்றது. உலகம் நல்வினைகட்கும் இடனாகவிருக்கின்றது; தீவினைகட்கும் இடங்தந்திருக்கின்றது. உலகம், அறங்கட்கும் இடங்கொடுக்கின்றது; மறங்கட்கும் இடனாகாமல் இல்லை. உலகம், நல்லவர்களையும் தாங்கிக்கொண்டிருக்கின்றது; கெட்டவர்களையும் வைத்துக்கொண்டிருக்கின்றது. உலகம், பெரியவர்களையும் பெற்றிருக்கிறது; சிறியவர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/27&oldid=1301364" இலிருந்து மீள்விக்கப்பட்டது