பக்கம்:குற்றால வளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நிலையிலா வாழ்வு


இளமையை இன்பத் துறையில் அழித்து விட்டு முதுமையில் உலக நன்மையை நாட்டலாம் என எண்ணுதலாகாது. "மற்றறிவாம் நல்வினை யாமிளைஞம் என்னாது, கைத்துண்டாம்போதே கரவா தறஞ்செய்ம்மின்-முற்றியிருந்த கனியொழியத் தீவளியால், நற்காய் உதிர்தலும் உண்டு" என்றபடி இளமையிலேயே மாள்வதும் இயல்பு. ஆகலின் நாளை யேன்னாது அறஞ்செய்ய முந்துதல் வேண்டும். நாளை நாளை யென்போமானால், நாளை நம்முடை நாளென்பதையும் நமனுடை நாளென்பதையும் யார் கண்டவர்? செய்ய வேண்டுவதை இன்றே-இன்னே செய்தல் வேண்டும்.


வாழ்வு நிலையில்லாதது. ஆனால் என்றும் நிலைத்து உயிரோடு தொடரக் கூடியது, தான் செய்த அறமும் மறமுமேயாகும். ஆதலால் உயிரோடு தொடரக்கூடிய அறத்தை யாற்றச் சிறிதும் தவறுதல் ஆகாது. "அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழியம்பொழுக, மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு, கைத் தலைமேல் வைத்தழும் மைந்தருஞ் சுடுகாடு மட்டே, பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாபமுமே" என்பது பட்டினத்தடிகள் வாக்கு. ஆதலால் நிலையிலாவாழ்வை உணர்ந்து பிறந்த பயனை யடைந்து ஈடேற விரும்பும் மக்கள் நல்லற மாற்றுவாராக; நிலையிலா வாழ்வை நிலையினதென மயங்கிப் பெருமிதங் கொண்டு கெடுவினை செய்து கெட்டழியா தொழிவாராக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/57&oldid=1303478" இலிருந்து மீள்விக்கப்பட்டது