உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரிகாலன் - கருங்கடல்


மண்பாண்டச் சூளைகளுக்கும், தாதுக்களை உருக்குவதற்கும் உலோக வார்ப்பட வேலைகளுக்கும் கரி மிகுதியாகப் பயன்படுகிறது. வர்ணங்களிலும் வெடிகளிலும் வெடியுப்புடன் கரியைப் பொடிசெய்து கலப்பதுண்டு. கார்பனின் பலவகைத் தோற்றங்களுள் கரியும் ஒன்று. பார்க்க: கார்பன்.

கரிகாலன்: தமிழகத்தில் ஆண்ட சோழ மன்னர்களுள் மிகவும் சிறப்போடு விளங்கியவர் கரிகாலன். 1,700 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்திருந்தார். இவருடைய வரலாற்றைப் பற்றி விரிவாக ஒன்றும் தெரியவில்லை.

கரிகாலன் பல பெரும்போர்களில் வெற்றிபெற்ற ஒரு பெரிய வீரர். இவர் ஆட்சியில் மக்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர். இவர் கடல் வாணிகத்தை வளர்த்தார். காவிரியாற்றின்மேல் பெரிய அணை ஒன்றைக் கட்டினார். அந்த அணைக்குக் கல்லணை என்று பெயர். அது இன்றும் அழியாமல் இருக்கிறது.

கரிகாலன் தமிழ்ப் புலவர்களைப் பெரிதும் ஆதரித்து வந்தார். பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய தமிழ் நூல்கள் இவர் பெருமையைக் கூறுகின்றன.

கரித்தார் : சாலைகள் அமைப்பதற்குத் தார் பயன்படுகிறது. தாருக்குக் கீல் என்றும் பெயர். பெட்ரோலியத்திலிருந்து (த.க.) கிடைக்கும் பல பொருள்களில் தாரும் ஒன்று. நிலக்கரியிலிருந்து (த.க.) ஒரு வகைத் தார் கிடைக்கிறது. இதற்குக் கரித்தார் என்று பெயர்.

நிலக்கரியைக் காற்றுப்புகாத பாத்திரங்களிலிட்டுக் காய்ச்சினால் அது புகையாமல் எரியும். ஒரு வாயு அதிலிருந்து பிரிந்து வெளிவரும். இவ்வாயுவைக் குளிர வைத்தால் அதிலிருந்து பல பொருள்கள் கிடைக்கும். அவற்றுள் ஒன்று கரித்தார்.

கரித்தார் பிசுபிசுப்பான ஒரு திரவம்; கருப்பாக இருக்கும். இதிலும் பல பொருள்கள் கலந்துள்ளன. கரித்தாரைக் கொதிக்கவைத்தால் அதில் கலந்துள்ள பொருள்கள் வெவ்வேறு வெப்பநிலைகளில் ஆவியாக மாறி வெளிவருகின்றன. அவற்றைக் கலங்களில் பிடித்துக் குளிரவைப்பார்கள்.

நாம் பயன்படுத்தும் பல பொருள்கள் கரித்தாரிலிருந்து தயாரிக்கப்படுபவையே. பிளாஸ்ட்டிக், நைலான், சாயங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், வெடிமருந்துகள் முதலியவை கரித்தாரிலிருந்து கிடைக்கும் பொருள்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. டீசல் எண்ணெய், பெட்ரோல் போன்ற உயர்ந்த ரக எரிபொருள்களையும் கரித்தாரிலிருந்து வடித்து எடுக்கிறார்கள்.

கரிபியன் கடல்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் மத்திய அமெரிக்காவுக்கும் இடையில் உள்ளது கரிபியன் கடல். இது அட்லான்டிக் சமுத்திரத்தின் ஒரு பகுதியாகும். பானமா கால்வாய் (த.க.) வெட்டிய பிறகு இக்கடலில் கப்பல் போக்குவரத்து பெருகிவிட்டது. அட்லான்டிக் சமுத்திரத்திலிருந்து பசிபிக் சமுத்திரத்திற்குப் பானமா கால்வாயின் வழியாகச் செல்லும் கப்பல்கள் யாவும் இக்கடல் வழியே செல்லவேண்டும். அதனால் உலகிலேயே இன்று அதிகமான கப்பல் நடமாட்டம் உள்ள கடல்களுள் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இக்கடலின் பரப்பு 20 லட்சம் சதுர கிலோமீட்டர்

கரிபியன் கடலோரத்தில் கரிப் என்ற அமெரிக்க இந்தியர்கள் குடியிருந்து வந்ததால் இக்கடலுக்கு இப்பெயர் வந்தது. கரிபியன் கடலைச் சுற்றியுள்ள தீவுகள் பலவும் ஒரு காலத்தில் மலைகளாக இருந்தன. பிறகு அவற்றின் அடிப்பகுதி நீரில் அமிழ்ந்து போனதால் அவற்றின் மேற்பகுதிகள் இப்போது தீவுகளாக உள்ளன. பல தீவுகள் இன்னும் கடலில் மூழ்கிக் கிடக்கின்றன. சில வேளைகளில் அவற்றின் மீது கப்பல்கள் மோதி உடைந்து போவதும் உண்டு.

கருங்கடல்: ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில், துருக்கி, ரஷ்யா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு நடுவில் கருங்கடல் உள்ளது. பாஸ்ப்பொரஸ் ஜலசந்தியும், மார்மரா கடலும், டார்டனல்ஸ் ஜலசந்தியும் இதை மத்தியதரைக் கடலோடு சேர்க்கின்றன. குளிர்காலத்தில் மூடு பனியின் காரணமாக இக்கடலின் நீர் கருமையாகத் தெரியும். அதனால் இதற்குக் கருங்கடல் எனப் பெயர் வந்தது. டான்யூப், நீஸ்ட்டர், நீப்பர் போன்ற பெரிய ஆறுகள் வந்து இதில் கலக்கின்றன. கருங்கடலையொட்டி வடக்கே உள்ள அசாவ் கடலில் டான் ஆறு கலக்கிறது. ஆதலால் கருங்கடலின் நீர் மற்ற கடல் நீரைப்போல அவ்வளவு உப்பாக இல்லை. அசாவ் கடலுடன் சேர்த்து இதன்பரப்பு 4,75,000 சதுர கிலோமீட்டர். இக்கடலின் ஆழம் 2,000 மீட்டர். ஆயினும் 90 மீட்டருக்குக்கீழ்ப் பிராணிகளோ தாவரங்களோ உயிர் வாழ்வதில்லை. ஏனென்றால் அங்கு ஆக்சிஜன் போதிய அளவு கிடையாது.

பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகளுக்கு உள்ள ஒரே கடல் இதுதான். ரஷ்யா