உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கருங்காலி - கருநாடக இசை

-வுக்கும் இதுவே முக்கியமான கடல் வழியாகும். ஏனெனில் ரஷ்யாவின் வட பகுதியில் உள்ள துறைமுகங்கள் குளிர்காலத்தில் பல மாதங்கள் உறைபனியால் அடைபட்டுவிடும். கருங்கடல் துறைமுகங்களில் கடல்நீர் உறைவது இல்லை.

கருங்கடலில் தீவு ஒன்றுமில்லை. கிரைமியா என்ற தீபகற்பம் ஒன்று உள்ளது. மீன்கள் அதிகம் இல்லை. பெரிய அலைகள் ஏதும் இல்லாமல் கடல் அமைதியாக இருக்கும். எனினும் சில சமயம் பெரும் புயல்கள் இங்கு வீசுவது உண்டு.

கருங்காலி : நமக்குப் பயன்படும் பல மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று. இந்தியா, ஜப்பான், பிலிப்பீன் தீவுகள், இலங்கை, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய இடங்களில் கருங்காலி மரம் செழித்து வளர்கின்றது. இந்தியாவிலும் இலங்கையிலும் வளரும் மரம் மிகவும் சிறந்தது.

கருங்காலி மரம் மிகவும் உறுதியாக இருக்கும். இதை நன்றாக இழைத்து மெருகிடலாம். மெருகிட்ட மரம் பளபளப்பாக இருக்கும். இம்மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதி மிகக் கருப்பாகத் தோன்றும். கருங்காலி மிகவும் கனமான மரம். இது 200 ஆண்டுகளுக்கு மேலும் வளரும். சாதாரணமாக இது 25 மீட்டர் உயரமும், 2 மீட்டர் சுற்றளவும் கொண்டிருக்கும்.

கருங்காலியில் மிகமிக அழகான செதுக்கு வேலைகள் செய்யலாம்; கண் கவரும் பொம்மைகள் செய்யலாம். புல்லாங்குழல் செய்வதற்கும், கத்திகளின் கைப்பிடிகள், தந்தம் இழைத்த பெட்டிகள், நாற்காலி போன்ற மரச்சாமான்கள் செய்வதற்கும் கருங்காலி உகந்த மரமாகும். கருங்காலியின் காயிலிருந்து ஒரு வகைச்சாயமும், தைலமும் இறக்குகிறார்கள். இதன் பழத்தை உண்பார்கள்.

கருங்காலியில் பலவகை உண்டு. சில மரங்களில் வைரம் ஏறிய உட்பகுதியில் சிவப்பு, மஞ்சள், பழுப்பு ஆகிய வண்ணக் கோடுகளைக் காணலாம்.


கருங்குருவி (Indian Robin) : வீட்டுத் தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் கருநிறமான சிறு பறவை ஒன்று தன் வாலைச் செங்குத்தாகத் தூக்கிக்கொண்டு தத்தித் தத்திச் செல்வதை நீங்கள் கண்டிருக்கலாம். அதுதான் கருங்குருவி. கருங்குருவி 15 சென்டிமீட்டர் வரை நீளமிருக்கும். ஆண் கருங்குருவியின் இறக்கையின்மேல் சிறு வெள்ளைக்கோடு காணப்படும்; வாலின் அடிப்பகுதி சிவப்பாக கருங்குருவி பெண் கருங்குருவி ஆண்

இருக்கும்; உடலின் மற்றப் பகுதிகள் கருப்பாக இருக்கும். கருங்குருவியின் பேடு களிமண் நிறமுடையது. முதுகு மட்டும் களிமண் நிறமாகவும் மற்ற இடங்கள் கருப்பாகவும் உள்ள சில ஆண் குருவிகளை வட இந்தியாவில் காணலாம்.

கருங்குருவியின் அலகு கூர்மையாகவும் நுனியில் சற்று வளைந்தும் இருக்கும். இது தன் நீண்ட வாலை அடிக்கடி முதுகின்மேல் தூக்கி விரித்து மடிக்கும். இது பெரும் பாலும் தரையிலேயே வாழ்கிறது. தரையில் தத்தித்தத்திச் சென்று புழுபூச்சிகளைப் பிடித்துத் தின்கிறது. கருங்குருவிகள் பெரும்பாலும் ஒரே இடத்தில் நிலைத்து வாழும். ஆண் கருங்குருவி நன்றாகப்பாடும்.

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை எல்லா இடங்களிலும் கருங்குருவிகளைக் காணலாம்.

கருநாடக இசை: உலகில் பலவிதமான இசை வகைகள் வழங்கி வருகின்றன. இந்தியா முழுவதிலும் 700 ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுவாக ஒரே வகையான இசைதான் இருந்து வந்தது. பின்னர் அது இருவகையாகப் பிரிந்தது. அவற்றுள் ஒன்று தென்இந்தியாவில் சிறப்புற்றிருக்கும் கருநாடக இசை, மற்றொன்று வட இந்தியாவில் சிறப்புற்று விளங்கும் இந்துஸ்தானி இசை (த.க.).

கருநாடகம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது ஒரு பொருள்; விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாட்டையும் கருநாடகம் என்று சொல்வதுண்டு.

இந்துஸ்தானி இசைக்கும் கருநாடக இசைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. வட நாட்டில் வழங்கிவந்த இசையில் பாரசீக இசையும் அராபிய இசையும் கலந்து விட்டன. தென்னிந்தியஇசை தன் பண்பினின்று சிறிதும் வழுவாமல் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. கருநாடக இசையில் தேவாரப் பாடல்களே மிகப் பழமையானவை. தேவார இசையைப் பண் என்று கூறுவர். இவை பழங்காலந்தொட்டே பண்களில் சிறப்புற அமைத்துப் பாடப்பட்டு வருகின்றன.