உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரும்பு - கருவிகள்


கருநாடக இசையைச் சிறப்பாக இசைப்பதற்குப் பல இசைக்கருவிகள் உள்ளன. அவற்றுள் வீணை, நாகசுரம், புல்லாங்குழல் ஆகியவையும், தாளக்கருவிகளான மிருதங்கம், தவில், கடம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. அயல்நாட்டு இசைக் கருவியான வயலினையும் சிறந்த முறையில் இன்று கருநாடக இசைக்குப் பயன்படுத்துகின்றனர். பார்க்க: இசை; இசைக் கருவிகள்; இந்துஸ்தானி இசை.

கரும்பு: 'கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?' என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்கலாம். கரும்பு இனிப்பாக இருக்கும். கரும்பை விரும்பாதவர்கள் இலர்.

உலகிலேயே கரும்பு அதிகமாக விளையும் நாடு இந்தியாதான். கியூபா, பிரேசில், ஹவையீ, ஜாவா ஆகிய இடங்களிலும் கரும்பு விளைகிறது. கோயம்புத்தூரில் உள்ள மத்திய அரசின் கரும்பு ஆராய்ச்சி நிலையம் சிறப்பு மிகுந்தது. நல்ல தரமான கரும்பு வகைகளை இங்கு உற்பத்தி செய்கின்றனர். இங்கு நடைபெறும் ஆராய்ச்சிகளால் பல நாடுகள் பயனடைகின்றன. கரும்பு ஒருவகைப் புல் இனத்தைச் சேர்ந்தது. கரும்பின் இலைக்குத் தோகை என்று பெயர். கரும்பில் பல கணுக்கள் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் வேர் விடும் கண்களும் மொட்டும் காணப்படும். கணுவோடுள்ள கரும்புத் துண்டுகளை நிலத்தில் நட்டுத் தண்ணீர் பாய்ச்சுவார்கள். வேர்க் கண்களிலிருந்து வேர்கள் முளைத்து நிலத்தில் இறங்கும். மொட்டு வெடித்துத் தோகைவளரும். கரும்பு பூத்து விதைகளும் உண்டாகும். ஆனால் விதைவிதைத்துக் கரும்பைப் பயிர் செய்வதில்லை. ஒட்டுவகைக் கரும்புகளை உற்பத்தி செய்வதற்கு மட்டும் இந்த விதைகளைப் பயன்படுத்துகின்றனர். நல்ல நீர்ப்பாங்கான நன்செய் நிலங்களில்தான் கரும்பு செழித்து வளரும். கரும்புப் பயிருக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கரும்பு மஞ்சள் கரும்பு, செங்கரும்பு, நாமக் கரும்பு எனப் பலவகைக் கரும்புகள் உண்டு. முதிர்ந்த கரும்பை வெட்டி எடுத்து ஆலைகளில் சாறு பிழிவார்கள். இச்சாற்றைக் கொப்பரைகளில் ஊற்றிக் காய்ச்சினால் வெல்லம் அல்லது பழுப்புச் சர்க்கரை கிடைக்கும். இவ்வெல்லத்தை மீண்டும் காய்ச்சி சுத்தம் செய்தால் சர்க்கரையும் (அஸ்கா) கற்கண்டும் கிடைக்கும்.


கருவிகள்: சுவரில் சுத்தியால் ஆணி அடிக்கிறோம். கத்தரிக்கோலால் துணியைக் கத்தரிக்கிறோம்; மரத்தை ரம்பத்தால் அறுக்கிறோம். சுத்தியையும், கத்தரிக் கோலையும், ரம்பத்தையும் கருவிகள் என்று நாம் சொல்கிறோம். இன்று நாம் கையாளும் கருவிகளுள் பல எஃகினால் ஆனவை. எஃகுடன் குரோமியத்தைத் தனியாகவோ, வனேடியத்துடனோ கலந்து செய்யப்படும் கருவிகள் மிகவும் கடினமாக இருக்கும். டங்ஸ்ட்டன் கலந்த எஃகினால் ஆன கருவிகள் மிக அதிக வெப்பநிலையிலும் உறுதியாக இருக்கும். பார்க்க: இரும்பும் எஃகும்; உலோகங்கள்.

தச்சர்கள் கருவிகளின்றித் தம் தொழிலைச் செய்ய முடியாது. மரத்தை அறுப்பதற்கு ரம்பத்தையும், செதுக்குவதற்கு உளியையும், மரத்தை வழுவழுப்பாக இழைப்பதற்கு இழைப்புளியையும், மரத்தில் துளையிடுவதற்குத் துளை ஊசி, தமரூசி, முறுக்குத் தமரூசி, துரப்பணம் முதலிய பல கருவிகளையும் பயன்படுத்துகின்றனர். உழவர்களுக்குக் கலப்பை, மண்வெட்டி போன்ற கருவிகள் உதவுகின்றன.

உலோக வேலைகளிலும் உளி, துரப்பணம், ரம்பம் போன்ற கருவிகள் பயன்படுகின்றன. இக்கருவிகள் உலோகங்களின் தன்மைக்கேற்ப வடிவிலும் அளவிலும் வேறுபடுகின்றன. உலோக வேலைக் கருவிகளுள் அரம் முக்கியமானது. இது பல வடிவங்களில் உள்ளது. உலோகப் பரப்புகளை அராவி வழுவழுப்பாக்க அரம் பயன்படுகின்றது. சாதாரணமாக அரம் 15 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். தொழிற் சாலைகளில் பயன்படும் பெரியஅரம் 100 சென்டிமீட்டர் நீளமிருக்கும். கடிகாரம் பழுது பார்ப்பவர் பயன்படுத்தும் அரத்தின் நீளம் இரண்டே சென்டிமீட்டர் தான்!

பொருள்களை அளப்பதற்கும் பல கருவிகள் பயன்படுகின்றன. கோடு போடவும், நீளத்தை அளக்கவும் நீங்கள் பயன்-