உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உளி துரப்பணம் ரம்பம் அரம்

படுத்தும் அளவுகோலும் ஒரு கருவிதான். மிகவும் நுட்பமாக அளக்க இன்று பல கருவிகள் செய்யப்படுகின்றன. அவற்றுள் வெர்னியரும் திருகுமானியும் குறிப்பிடத்தக்கவை. நேர்க்கோணங்களைச் சரிபார்க்க மூலைமட்டம் என்ற கருவி பயன்படுகிறது. இன்னும் இதைப் போன்று பல நூற்றுக்கணக்கான கருவிகள் இன்று பயன்பட்டு வருகின்றன.

கல்கத்தா: இந்தியாவின் பெரிய நகரங்களில் ஒன்று கல்கத்தா. இது மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர். இங்கு 50 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இது கங்கையின் கிளை ஆறாகிய ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கடலிலிருந்து இந்நகரம் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனினும் மிகப்பெரிய கப்பல்களும் ஆற்றின்வழியே இங்கு வரலாம். உலகில் உள்ள மிகப்பெரிய துறைமுகப் பட்டினங்களில் கல்கத்தாவும் ஒன்றாகும்.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் கல்கத்தா நகரம் உருவாகியது. கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர் இந்தப்பகுதியில் ஒரு சிறிய இடத்தை விலைக்கு வாங்கி, அங்கு ஒரு கோட்டையைக் கட்டினார். வாணிகத்திற்காகக் கட்டப்பட்ட இக்கோட்டையே பின்னர் ஆங்கில அரசாங்கத்தின் செயலகமாக மாறியது. இங்கு மக்கள் பெருமளவில் குடியேறத் தொடங்கினார்கள். காளி கட்டம், கோவிந்தபூர், சுதாநதி என்ற மூன்று கிராமங்களும் ஒன்றாக இணைந்து கல்கத்தா என்ற பெரிய நகரமாயிற்று. காளிகட்டம் என்பதே கல்கத்தா என மாறிற்று. 1756-ல் வங்காள நவாபாக இருந்த சுராஜ் உத்தௌலாவுக்கும் ஆங்கிலேயருக்கும் போர் மூண்டபோது இந்நகரை நவாபு கைப்பற்றினார். ஆனால் ஆங்கிலேயர் பிறகு நவாபைத் தோற்கடித்து, நகரை மீட்டுக்கொண்டனர். ஆங்கில அரசாங்கத்தின் முக்கிய நகரமாக இது விளங்கியது. 1912ஆம் ஆண்டு வரை இது இந்தியாவின் தலைநகராக இருந்தது. கல்கத்தா கல்கத்தாவின் ஒரு பகுதி ஹௌரா. இது ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் உள்ளது. ஹெளராவையும் கிழக்குக்கரையில் உள்ள கல்கத்தாவையும் ஒரு பெரிய பாலம் இணைக்கிறது. இதன் நீளம் 457 மீட்டர். இதுவே இந்தியாவின் மிகப் பெரிய பாலமாகும். இந்தப் பாலத்தின் அடியில் கப்பல்கள் செல்லலாம். கல்கத்தாவில் கோயில்களும் மாளிகைகளும் அதிகம். கல்கத்தாவை 'மாளிகை நகரம்' என்றும் சொல்வதுண்டு. பளிங்குக் கற்களால் கட்டப்பெற்ற விக்டோரியா மாளிகை மிகச் சிறப்பானது. காளிகட்டத்தில் உள்ள கோயில், தட்சிணேசுரம் கோயில், பாரிசுவநாதர் என்ற சமண தீர்த்தங்கரர் (த.க.) கோயில் ஆகியவை முக்கியக் கோயில்கள். தட்சிணேசுரம் காளி கோயிலில்தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் பூசாரியாக இருந்தார். இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகாநந்தரால் பேலூரில் நிறுவப்பட்டுள்ள மடம் சிறப்புமிக்கது. வெவ்வேறு கோணங்களில் நின்று பார்த்தால் இது இந்துக் கோயில் போலவும், முஸ்லிம்களின் மசூதி போலவும், கிறிஸ்தவர்களின் தேவாலயம் போலவும் வெவ்வேறு விதமாகத் தோன்றும். எல்லா மதங்களும் ஒன்று என்ற இராமகிருஷ்ணரின் தத்துவத்தை இது விளக்குகிறது. ஜோரா சான்கோ என்னுமிடத்தில் கவி ரவீந்திரநாத டாகுர் பிறந்த இல்லத்தில் தேசீய நடன, நாடகக் கலை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கல்கத்தாவிலுள்ள விக்டோரியா நினைவுச் சின்னம்