பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வங்கி

9

டிடாஸ் என்ற இடங்களில் இயற்கை வாயு (த.க.) கிடைக்கின்றது. முக்கிய நகரங்களுக்குக் குழாய்மூலம் இதனைக் கொண்டு சென்று எரிபொருளாகப் பயன் படுத்துகின்றனர்.

டாக்கா இந்நாட்டின் தலைநகரம். சிட்டகாங் முக்கிய துறைமுகம். மக்களுள் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் ஆகியோரும் சிறு அளவில் உள்ளனர். முக்கிய மொழி வங்காளி.

இந்தியா 1947-ல் சுதந்தரம் அடைந்தபோது முஸ்லிம்கள் பெருமளவில் இருந்த பகுதிகளை இணைத்துப் பாக்கிஸ்தான் (த.க.) என்ற நாட்டையும் உருவாக்கினர். இது மேற்கிலும் கிழக்கிலுமாக இரு பகுதிகளாக அமைந்தது. மேற்குப் பகுதிக்கு மேற்குப் பாக்கிஸ்தான் என்றும் கிழக்குப் பகுதிக்குக் கிழக்குப் பாக்கிஸ்தான் என்றும் பெயர். கிழக்குப் பாக்கிஸ்தானின் பரப்பு குறைவு. ஆனால் மக்கள் தொகை அதிகம். மொழி, பண்பாடு முதலியவற்றிலும் இவர்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தனர். அதுமட்டுமல்ல; மக்கள் தொகையில் பெரும்பகுதியினராக இருந்தும் தங்களுக்கு உரிய நன்மைகள் கிடைக்கவில்லை என்ற குறை கிழக்குப் பாக்கிஸ்தானிய மக்களிடமிருந்தது. எனவே தனிநாடாகப் பிரிந்து வாழ விரும்பினர். இவர்களுடைய முயற்சியைப் பாக்கிஸ்தானிய அதிபர் தம் ராணுவத்தைக் கொண்டு அடக்க முயன்றார். அதன் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். எனினும் இவர்கள் இந்தியாவின் உதவியோடு, தீரமாகப் போராடி 1971-ல் சுதந்தரம் பெற்றனர்.


வங்கி (Bank): பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். திருட்டினாலோ, தீ விபத்தினாலோ நம்முடைய பணத்துக்கு இழப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பாக வைத்திருந்து, நமக்குத் தேவையானபோது தருகின்ற ஒரு நிறுவனமே வங்கி ஆகும்.

இன்றைய வங்கிகளுக்கு முன்னோடியாக இருந்தவர்கள் பொற்கொல்லர்கள். முன் காலத்தில் மக்கள் வெளியூர் செல்லும்முன் தங்களுடைய நகைகளையும், பணத்தையும் பொற்கொல்லர்களிடம் கொடுத்துப் பாதுகாப்பாக வைத்தனர். அவற்றைப் பாதுகாப்பதற்குப் பொற்கொல்லர்கள் அவர்களிடம் சிறிது தொகை கூலியாக வாங்கிக் கொண்டனர். பின்னர், அப்படி வைத்த பணத்தை நம்பிக்கையானவர்களுக்குக் கடன் கொடுத்து வட்டியுடன் சேர்த்துத்

வங்கிகளில் பாதுகாப்பான அறைகளில் பணத்தை வைக்கிறார்கள். இந்த அறைகளுக்கான தனிவகைக் கதவைப் படத்தில் காணலாம். தீயினாலோ வெள்ளப் பெருக்கினாலோ இக்கதவு சேதமடையாது; இதில் கன்னமிடவும் முடியாது. வெடிவைத்துத் தகர்க்கவும் இயலாது.


திரும்பப் பெறலாம் என்று அவர்கள் கண்டனர். எனவே, தாங்கள் கூலி பெறுவதற்குப் பதிலாக, தங்களிடம் பணம் கொடுத்து வைத்தவர்களுக்கு வட்டி கொடுக்கலாயினர். இவ்வாறு தொடங்கிய பணச் சேமிப்பும், கடன் கொடுக்கல் வாங்கலும் பின்னர் வங்கி முறையாக உருவாகியது.

இக்கால வங்கிகள், பொதுமக்கள் கொடுக்கும் பணத்தைக் காப்பதுடன், வேறுபல அலுவல்களையும் செய்கின்றன. வெளியூர்களில் செலாவணி செய்ய வசதியாகப் 'பயணி காசோலை' (Traveller's Cheque) வழங்குகின்றன. நம்மை அறியாத வணிகரிடமும் வங்கிகளிடமும் நம்மை அறிமுகப்படுத்துகின்றன. பாதுகாப்புப் பெட்டகங்களில் ( Vaults ) நம் நகைகளையும், பங்குப் பத்திரங்கள் போன்ற முக்கியமான சான்றுகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்கின்றன. வாணிகம், தொழில் போன்றவற்றுக்குக் கடன் வழங்குகின்றன.

வங்கியில் ஒருவர் பணத்தைப் போட்டு, வேண்டும்பொழுது எடுத்துக்கொள்ளலாம். இதற்கு 'நடப்புக் கணக்கு' (Current Account) என்று பெயர். ஒருவர் ஒரு தொகையை நீண்டகாலத்திற்கு இருப்பாக வைத்திருக்க விரும்பினால், அதை அவர் 'நிலைத்த இருப்பாக' (Fixed Deposit) போட்டு வைக்கலாம்.