பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வல்லபபாய் பட்டேல்


புள்ளிவிவரங்களையும் விரைவாகவும் எளிதாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு தொகுதிப் புள்ளி விவரங்கள், ஒன்று மாறும்பொழுது இன்னொன்று எவ்வாறு மாறுதலடைகிறது என்பதை வரைபடங்கள் காட்டுகின்றன. ஒரு தொகுதிப் புள்ளிவிவரங்களின் முக்கியமான சிறப்பியல்புகளைப் பார்த்தவுடன் அறிந்துகொள்வதற்கும் வரைபடங்கள் உதவுகின்றன. மருத்துவ மனைகளில் நோயாளிகளின் உடல் வெப்ப நிலையைத் தாதியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை வரைபடத்தில் குறிக்கிறார்கள். மருத்துவர் இந்த வரைபடத்தைப் பார்த்தே நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுகொள்ள முடியும். தொழிற்சாலைகளிலும், வாணிக நிறுவனங்களிலும் உற்பத்தி, விற்பனை, இலாபம் போன்றவற்றின் ஏற்ற இறக்கத்தை அறிந்துகொள்ள வரைபடம் பயன்படுகின்றது. இவ்வாறு வரைபடங்கள் பல வழிகளில் பல துறைகளில் உதவுகின்றன.


வல்லபபாய் பட்டேல் (1875-1950): இந்தியா விடுதலை பெற்றபொழுது நாடெங்கும் 565 சுதேச அரசுகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றுள் சில இந்தியாவுடன் இணையாமல் சுதந்தரமாக இருக்க முயன்றன. அதற்கு இடம் கொடாமல், சாதுரியத்தையும், அரசியல் மதிநுட்பத்தையும் கொண்டு அந்த அரசுகளை எல்லாம் இந்தியாவுடன் சுமுகமாக இணைத்து, நாட்டின் ஒருமைப்பாட்டைக் காத்த தலைவர் சர்தார் வல்லபபாய்பட்டேல். இச்சாதனைக்காக இவரை 'இரும்புமனிதர்' என்று போற்றுகின்றனர்.

வல்லபபாய் பட்டேல்

வல்லபபாய் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் கைரோ மாவட்டத்தில் நடியத் என்னும் ஊரில் 1875 அக்டோபர் 31ஆம் நாள் பட்டேல் பிறந்தார். இவருடைய தந்தை ஜாவேரிபாய்பட்டேல் ஒரு குடியானவர்; 1857-ல் நடந்த முதலாவது இந்திய சுதந்தரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர். இவருடைய அண்ணன் வித்தல்பாய் பட்டேலும் சிறந்த தேசபக்தர்; இந்தியச் சட்டசபைத் தலைவராக இருந்தவர்.

மாணவப் பருவத்திலேயே பட்டேல் அஞ்சாநெஞ்சும், மனவுறுதியும் உடையவராக இருந்தார். 1897-ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார். வழக்குரைஞராக வேண்டும் என எண்ணித் தாமே சட்ட நூல்களைக் கற்றுவந்தார். 1910-ல் லண்டன் சென்று, பாரிஸ்ட்டர் தேர்வில் முதன்மையாகத் தேறினார். 1913-ல் இந்தியா திரும்பி, ஆமதாபாத் நகரில் திறமையுடன் வழக்குரைஞர் தொழிலை நடத்தலானார். புகழும் பொருளும் சேர்ந்தன.

இவர் 1917-ல் ஆமதாபாத் நகராட்சி உறுப்பினராகத் தேர்வு பெற்றார். அதே ஆண்டில், காந்தியடிகளுடன் தொடர்பு கொண்டு அவருடைய நம்பிக்கைக்கு உரியவரானார். தம் சொந்த மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டபோது, மக்களிடம் நிலவரி வசூலிக்க அரசு முயன்றது. காந்தியடிகளின் ஆணைப்படி, அதை எதிர்த்து வரிகொடா இயக்கம் நடத்தி பட்டேல் வெற்றி கண்டார். இதன்பின், பட்டேல் வழக்குரைஞர் தொழிலை விட்டு காந்தியடிகளின் சீடரானார். 'ரௌலத்' சட்டத்தை எதிர்த்துக் காந்தியடிகள் தொடங்கிய போராட்டத்தில் பட்டேல் கலந்துகொண்டார். 1920-ல் பம்பாய் மாநிலக் காங்கிரஸ் தலைவரானார்.

பர்தோலி மாவட்டத்தில் நிலவரி உயர்வை எதிர்த்து பட்டேல் வரி கொடா இயக்கம் நடத்தினார். அரசு பணிந்து உயர்வை நீக்கியது. "ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஒரு சர்தார் (படைத் தலைவர்) கிடைத்து விட்டார்" என்று காந்தியடிகள் பட்டேலைப் பாராட்டினார். 1930-ல் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பட்டேல் தீவிரப் பங்கு கொண்டார்; மூன்று முறை சிறை சென்றார். 1931-ல் நடந்த கராச்சிக் காங்கிரஸுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1932-ல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாடு தோல்வியடைந்தது. இதனால் ஒத்துழையாமை இயக்கத்தைக் காங்கிரஸ் தொடங்கியது. காந்தியடி-