பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாட்- வாட்டர்லூ

23

-களுக்காகத் தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருப்பவர்களும் வாக்களிக்க முடியாது. வாக்களிக்கும் முறையைப் பண்டைக் கால முதலே தமிழர்கள் அறிந்திருந்தனர். அக்காலத்தில் ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் மூலம் அவர்கள் உறுப்பினர் களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஊர்மக்கள் ஒரு பொது இடத்தில் கூடுவார்கள். அங்குக் கூடியவர்களில் பெரும்பான்மையோர் யாருடைய பெயரைச் சொல்கிறார்களோ அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இது தவிர, 'குடவோலை' என்னும் இரகசிய வாக்கெடுப்பு முறையும் அக்காலத்தில் இருந்தது. ஊர்மக்கள் தாங்கள் விரும்புகின்றவர்களின் பெயர்களை ஓலை நறுக்குகளில் எழுதி ஒரு குடத்தில் போடுவார்கள். பின் அக்குடத்தை ஒரு பொதுஇடத்தில் வைத்து ஓலைகளை எண்ணுவார்கள். யாருடைய பெயர் அதிகமான ஓலைகளில் இருக்கிறதோ அவர் உறுப்பினராகத் தேர்வு பெறுவார். பண்டைய கிரேக்க, ரோமானியர்களுக்கும் வாக்களிக்கும் முறை தெரிந்திருந்தது. எனினும், பிரதிநிதித்துவ நிறுவனங்கள் ஏற்பட்ட பின்னரே இக்காலத்தில் வாக்குரிமை மிகுதியாகச் செயல்பட்டு வருகிறது. பார்க்க : தேர்தல்.


வாட், ஜேம்ஸ் (James Watt, 1736-1819): ரெயில் வண்டியை இழுத்துச் செல்லும் நீராவி எஞ்சினை நாம் பார்த்திருக்கிறோம். நீராவி எஞ்சின்கள் முதன் முதலில் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்டபோது, அவை பெரும்பாலும் தண்ணீர் இறைப்பதற்கே பயன்பட்டன. அவற்றின் சக்தி அவ்வளவு குறைவாகவே இருந்தது. அவற்றைப் பல மாறுதல்களுடன் திருத்தியமைத்து, அதிக சக்தியுடையனவாக அமைத்தவர் ஜேம்ஸ் வாட்.

ஜேம்ஸ் வாட் ஸ்காட்லாந்தில் கிரீனாக் (Greenock) என்னுமிடத்தில் பிறந்தார். இளம் வயதில் கணிதத்தில் இவர் ஆர்வம் காட்டினார். இவருடைய தந்தை ஒரு சிறு வணிகர். சிறந்த தச்சருங்கூட. அவருடன் சேர்ந்து ஜேம்ஸ் வாட் தச்சுவேலையில் ஈடுபட்டுவந்தார். கணிதக் கருவிகள் செய்வதில் மிக்க ஆர்வங்கொண்டு, அதில் பயிற்சி பெறுவதற்காகத் தம் 19ஆம் வயதில் லண்டன் சென்றார். ஆனால் அங்கு உடல் நலம் குன்றியதால் ஓர் ஆண்டுக்குள் திரும்பிவிட்டார். ஸ்காட்லாந்திலேயே கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் கணிதக் கருவிகள் செய்பவராக வேலைக்கு அமர்ந்தார்.

ஜேம்ஸ் வாட்

1763-ல் இவரிடம் ஒரு நீராவி எஞ்சினைப் பழுதுபார்ப்பதற்காகத் தந்தனர். உண்மையில் அதில் பழுது எதுவும் இல்லை. போதிய அளவு நீராவியை உற்பத்தி செய்ய இயலாத அளவுக்கு, அதிலுள்ள கொதிகலன் சிறியதாக இருந்தது. ஜேம்ஸ் வாட் அதை நன்கு ஆராய்ந்தார். அதிலுள்ள மற்றக் குறைகளையும் திருத்தியமைத்தார். அவர் திருத்தியமைத்த நீராவி எஞ்சின் மிகத்திறம்படச் செயல்பட்டது.

1774-ல் ஜேம்ஸ் வாட், போல்ட்டன் (Boulton) என்ற தொழில் அதிபருடன் கூட்டுசேர்ந்து நீராவி எஞ்சின் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். போல்ட்டனிடம் பெரிய தொழிற்சாலை இருந்தது. நிருவாகத்தையும் அவரே கவனித்துக்கொண்டார். ஜேம்ஸ் வாட் புதிய புதிய சாதனங்களை அமைப்பதில் ஈடுபட்டார். கூட்டு நிறுவனம் வெற்றிகரமாக நடைபெற்றதால் மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான வசதியும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. விரைவில் இவர் புகழ்பெற்றார்.


வாட்டர்லூ போர் (Battle of Waterloo) : பிரான்ஸ் நாட்டின் பேரரசராகவும், சிறந்த படைத் தலைவராகவும் விளங்கிய நெப்போலியன் (த.க.) இறுதியாகத் தோல்வியுற்ற போர் வாட்டர்லூ போர் ஆகும். இத்தோல்வியினால், ஐரோப்பா முழுவதையும் தம் ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற நெப்போலியனின் பேராசை அழிந்தொழிந்தது. வாட்டர்லூ பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸின் தெற்கே 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிற்றூராகும்.

நெப்போலியன் ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி வந்தார். 1813-ல் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும்