பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிகம்

25


இந்த வெடிவகைகளைச் செய்வதற்கு வேண்டிய முக்கிய எரிபொருள்கள் கந்தகமும், கரியும். எந்தப் பொருளும் தீப்பற்றி எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. அதைத் தரும் பொருளாக வெடியுப்பு (Saltpetre) பயன்படுகிறது. வெடியுப்பின் ரசாயனப் பெயர் பொட்டாசியம் நைட்ரேட். இதனுடன் கந்தகமும் கரியும் சேர்ந்த கலவையே வெடிமருந்து எனப்படும். இன்று வெடியுப்புக்குப் பதிலாகப் பொட்டாசியம் குளோரேட் பெரிதும் பயன்படுகிறது. இது மிகுந்த வெப்பத்தைக் கொடுக்கக்கூடியது. இதனால் வெடி மருந்துக் கலவையுடன்சேர்க்கப்பட்டிருக்கும் சிலவகை உலோகத் துகள் களுக்கு வண்ண ஒளி உண்டாகிறது.

வெடி வகைகளை எவ்வாறு செய்கிறார்கள் தெரியுமா? அட்டை அல்லது காகிதச் சுருளாலான ஒரு குழலின் ஒரு பக்கத்தைக் களிமண்ணால் மூடிவிடுகிறார்கள். பின்னர் அதனுள் வெடி மருந்துக் கலவையை நிரப்புகிறார்கள். மேல் பக்கத்தில் நூல் திரி பொருத்தப்படுகிறது. இதில் தான் தீ பற்றவைக்க வேண்டும். ராக்கெட் வாணத்தில் திரி அடியிலிருக்கும். இதில் தீ வைத்தவுடன் வாணத்திலுள்ள மருந்து எரிந்து, அழுத்தம்மிக்க வாயு அடிப்பக்கத்திலுள்ள சிறிய துளை வழியாக வேகமாக வெளிவரும். அதனால் வாணம் மேலே செல்லும்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவிலும், சீனா, பாரசீகம் முதலிய நாடுகளிலும் இத்தகைய வாணங்களைச் செய்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இத்தொழில் பரவிற்று.

வாணவேடிக்கைக்கு மட்டுமல்லாமல் வேறு சில வகைகளிலும் வாணங்கள் பயன்படுகின்றன. கப்பல்கள் ஏதேனும் அபாயத்தில் சிக்கினால் அவற்றிலிருந்து ராக்கெட் வாணம் செலுத்துவார்கள். இதைக் கண்டதும் அருகிலுள்ள கப்பல்கள் உதவிக்கு விரைந்து செல்லும். போர் நடந்துகொண்டிருக்கும் போது தொலைவிலுள்ள படையினருக்குச் சில தகவல்களையும் ஆணைகளையும் தெரிவிக்கவும் இது பயன்படுகிறது.


வாணிகம் : பொருள்களை விலைக்கு வாங்குவதும், விற்பதும் வாணிகம் ஆகும். வாணிகத்தின் மூலம் உணவு, உடை முதலிய பொருள்கள், அவற்றை உற்பத்தி செய்வோரிடமிருந்து அவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்குக் கிடைக்கிறது.

இன்று தேவையான ஒரு பொருளைக் கடையிலிருந்து பணம் கொடுத்து வாங்குகிறோம். பண்டைக்காலத்தில் பணம் வழக்கத்தில் இல்லை. ஒருவன் தன்னிடமுள்ள பொருளை மற்றவனுக்குக் கொடுத்து, அதற்குப் பதிலாக அவனிடமிருந்து தனக்குத் தேவையான ஒரு பொருளை வாங்கிக்கொள்வான். எடுத்துக் காட்டாக, ஒரு வேட்டைக்காரன் தான் வேட்டையாடிய விலங்கின் தோலை ஒரு குடியானவனிடம் கொடுத்து, அவனிடமிருந்து தனக்கு வேண்டிய நெல்லை வாங்கிக்கொள்வான். இவ்வாறு ஒரு பண்டத்தை இன்னொரு பண்டத்திற்கு நேரடியாக மாற்றுவதற்குப் 'பண்ட மாற்று' (Barter) என்று பெயர். இந்தப் பண்டமாற்றே வாணிகத்தின் தொடக்கமாகும். நெடுங்காலம்வரை பண்டமாற்று முறையிலேயே வாணிகம் நடந்துவந்தது.

பண்டமாற்று முறையில் ஒரு படி நெல்லுக்கு எவ்வளவு தோல் என்று நிருணயிப்பது எளிதாக இல்லை. மேலும், வேட்டைக்காரனுக்கு நெல் தேவையான பொழுது, குடியானவனுக்குத் தோல் தேவைப்படாமல் இருக்கலாம். இருவரின் தேவையும் ஒரே சமயத்தில் இருந்தால்தான் பண்டமாற்று செய்து கொள்ள முடியும். எனவே, நடைமுறையில் பண்டமாற்று நன்கு செயல்படவில்லை. அதனால், ஒரு பொருளின் மதிப்புக்கு ஈடாக எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய பொதுவான பொருள் ஒன்றை உருவாக்க முயன்றனர். இந்த இடைப்பொருளாகப் பணம் (த.க.) உருவாயிற்று.அதன் பின் வாணிகம் பெருமளவில் பெருகியது.

வாணிகத்தில் பலவகை நடவடிக்கைகள் அடங்கியுள்ளன. ஓர் எந்திரத்தைச் செய்வதற்குப் பல்வேறு மூலப்பொருள்கள் வேண்டும். அவற்றுள் சில வெளி நாடுகளிலிருந்து வருகின்றன. இன்னும் சில, நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வருகின்றன. இப்பொருள்கள் யாவும் ரெயில், லாரி, விமானம், கப்பல் முதலிய போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் தொழிற்சாலைக்குப் போய்ச் சேருகின்றன. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தம் உழைப்பினால் எந்திரத்தைத் தயாரிக்கிறார்கள். அதன்பின் அது விற்பனைக்கு வருகிறது. இத்தனை நடவடிக்கைகளுக்கும் பின்னரே ஒரு பொருளை நாம் வாங்குகிறோம். இந்த நடவடிக்கைகள் மூலம் இலட்சக்கணக்கானவர்கள் வேலையும், வாழ்வும் பெறுகிறார்கள். வாணிகப் பெருக்கத்தினால் போக்குவரத்துச் சாதனங்களும் பெருகுகின்றன.

வாணிகத்தில் உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம் என இருவகை