பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வாத்து

உண்டு. நாட்டில் ஓரிடத்தில் உற்பத்தியாகும் பொருள்கள், பல இடங்களுக்கும் பரவி மக்களுக்குக் கிடைக்கும்படி செய்வது உள்நாட்டு வாணிகம். இது உள்ளூரிலோ, மாநிலங்களுக்கிடையிலோ நடைபெறும். கிராமச் சந்தைகள், நகரச் சந்தைகள் போன்றவை உள்நாட்டு வாணிகத்திற்கு உதவுகின்றன.

ஒரு நாட்டில் மிகுதியாக உள்ள பொருள்களை மற்றொரு நாட்டிற்கு அனுப்பி, தங்கள் நாட்டில் கிடைக்காத பொருள்களை அந்த நாட்டிலிருந்து வாங்கிக்கொள்வது வெளிநாட்டு வாணிகம் ஆகும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பொருள்களை அனுப்புவதற்கு ஏற்றுமதி என்றும், வேறு நாட்டிலிருந்து பொருள்களை வாங்கிக்கொள்வதற்கு இறக்குமதி என்றும் பெயர். இந்த ஏற்றுமதி-இறக்கு மதி (த.க.) வாணிகம் இக்காலத்தில் பொருளாதாரத்திற்கு மிக இன்றிய மையாததாகும்.

பண்டைக்காலத்திலேயே உலக நாடுகளிடையே வாணிகம் நடந்துவந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எகிப்து, பாபிலன், மெசப்பொட்டேமியா, அசிரியா, கிரீஸ், ரோம் முதலிய மேலை நாடுகளுடனும், இலங்கை , சிங்கப்பூர், மலேயா, சீனா, இந்தோனீசியா முதலிய நாடுகளுடனும் நெருங்கிய கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். ஐரோப்பியர்கள் இந்தியா முதலிய கிழக்கு நாடுகளுக்கு வாணிக வழிகளைக் கண்டுபிடிப்பதற்காகவே பல கடற்பயணங்களை மேற்கொண்டார்கள். வாணிகத்தின் பொருட்டு இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள், நாளடைவில் இந்தியா முழுவதையும் அடிமைகொண்டு சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார்கள்.


வாத்து : நீரில் வாழும் பறவை வாத்து. ஆடாமல் அசையாமல் இது நீரில் நீந்திச் செல்வதைக் காண அழகாக இருக்கும். வீடுகளிலும் இதை வளர்க்கின்றனர். வாத்து உலகெங்கும் காணப்படுகிறது.

அன்னப் பறவை (த.க.) இனத்தைச் சேர்ந்தது வாத்து. வாத்துகளில் பல வகை உண்டு. கூசு வாத்து, குள்ள வாத்து என்பவை வளர்ப்பு வாத்துகளில் முக்கியமானவை. இவற்றுக்குப் பருமனான உடல் உண்டு. இறகுகள் இருந்தபோதிலும் இவற்றால் பறக்க இயலாது. தரையில் வேகமாக நடக்கவும் இயலாது. ஏனெனில், இவற்றின் கால்கள் குட்டை

கூசு வாத்து , குள்ள வாத்து

கூசு வாத்து குள்ள வாத்து

யானவை. மேலும், அவை உடலின் பின்புறம் மிகவும் பின்னோக்கி அமைந்துள்ளன. வேகமாக நடக்க முயன்றால் இவை முன்னால் குப்புற விழுந்துவிடும்! கால்களிலுள்ள விரல்கள் சவ்வுபோன்ற தோலால் இணைக்கப்பட்டுள்ளன. நீந்துவதற்கு இந்தச் சவ்வு , துடுப்புப்போல உதவுமே தவிர நடக்க உதவியாக இராது.

சில பறவைகள் ஆண்டுதோறும் குளிர்காலங்களில் வெப்பமான பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். இதற்குப் பறவைகளின் வலசை (த.க.) என்று பெயர். வாத்துகளில் ஒருவகையான காட்டு வாத்துகள் மிக நன்றாகப் பறக்கக் கூடியன. இக்காட்டு வாத்துகளும் இவ்விதம் நெடுந்தொலைவு வலசை செல்கின்றன. குளிர் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பலவகைக் காட்டு வாத்துகள் இந்தியாவுக்கு வருவது உண்டு. பின்னர் இளவேனில் காலத்தில் அவை திரும்பிச் சென்றுவிடுகின்றன.

நீரிலும் சேற்றிலும் உள்ள புழு, பூச்சி, நத்தை, மீன் முதலியவற்றை வாத்து உண்ணும். புல், பூண்டு, தானியம் ஆகியவற்றையும் உண்பது உண்டு. இப்பறவையின் மேல், கீழ்த் தாடைகளின் விளிம்பு ரம்பம் போன்ற அமைப்புடையது. வாய்க்குள் நீரும் சேறும் சென்ற பின் இது அலகைப் பக்கத்துக்குப் பக்கம் அலசும். அப்போது விளிம்பின் வழியே நீரும் சேறும் வழிந்து விடும். உணவாகக்கூடிய மீன், புழு முதலியன வாய்க்குள் தங்கும். அவற்றை வாத்து விழுங்கிவிடும்.

இப்பறவையின் வால்புறத்தில் ஒருவித எண்ணெய் சுரக்கும் சுரப்பி உள்ளது. வாத்து தன் அலகினால் அந்த எண்ணெயை எடுத்து இறகுகளைக் கோதிச் சீவுகிறது. இவ்வாறு செய்யும்போது ஒவ்வொரு இறகின் மேலும் எண்ணெய்