பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாய்

27

பூசப்படுகிறது. அதனால் இது நீந்தும் போது இறகுகள் நீரில் நனையாமலிருக்கின்றன.

வீடுகளில் வளர்க்கப்படும் வாத்துகள் கூடு கட்டுவதில்லை. ஆனால் காட்டு வாத்துகள் நீர்நிலைக்கு அருகிலுள்ள புல் புதர்களிடையே புல், தழை, குச்சி முதலியவற்றால் கூடு கட்டுகின்றன. அவை தம் மார்பிலுள்ள மென்மையான தூவிகளைப் பறித்துக் கூட்டில் வைத்து, அதை மெத்தென இருக்குமாறு செய்வதும் உண்டு. குஞ்சுகள் பிறக்கும்போது அவற்றுக்குச் சிறகுகள் இருப்பதில்லை. எனவே அவற்றால் பறக்க முடியாது. ஆயினும் பிறந்தவுடனேயே அவை நீந்தக்கூடும்! வாத்துகள் ஒன்றாகக் கூடிவாழும் இயல்புடையன.

வாத்து முட்டைகளை மக்கள் உணவாகக் கொள்கின்றனர். வாத்து இறைச்சியையும் உண்பதுண்டு.


வாய் : நாம் உண்பதற்கும் பேசுவதற்கும் உதவும் உறுப்பு வாய். மற்ற உயிர்ப் பிராணிகளுக்கு வாய் இருந்தாலும் நம்மைப்போல் அவை பேசுவதில்லை. அதனால் அவற்றை 'வாயில்லாப் பிராணிகள்' என்று சொல்வதும் உண்டு. உணவு உட்கொள்ள மட்டுமே அவற்றுக்கு வாய் உதவுகிறது.

வாய் வழியாக நாம் உணவு உட்கொள்கிறோம். உணவுப் பாதையின் தொடக்கமாக அமைந்துள்ளது வாய். இது உதடுகளாலும் மேல் தாடை, கீழ்த் தாடை, கன்னங்கள் ஆகியவற்றாலும் ஆக்கப்பட்ட பெட்டி போன்ற ஓர் உறுப்பாகும்.

வாய்

வாயின் உட்புறம் முழுவதும் சவ்வுப் படலத்தால் மூடப்பட்டிருக்கிறது. வாயின் மேல்பகுதி அண்ணம் எனப்படும். அண்ணத்தின் முன்பகுதி எலும்பாலானது. இது கடினமாயிருக்கும். பின்பகுதி மென்மையாயிருக்கும். இந்த மென்மையான பகுதியின் பின்புறமாக உள்நாக்கு தொங்குகிறது. வாயின் அடிப்பகுதியில் நாக்கு (த.க.) உள்ளது. உணவைச் சுவைத்து உண்பதற்கும் விழுங்குவதற்கும் இது உதவு கிறது. நாக்கின் மூலம்தான் நாம் பல்வேறு சுவைகளை உணர்கிறோம். வாயிலுள்ள பற்கள் உணவுப் பொருளைக் கடித்து, நசுக்கி நன்றாக அரைக்கின்றன. நாக்கின் அடிப்பகுதியில் ஆறு உமிழ்நீர்ச் சுரப்பிகள் (Salivary glands) உள்ளன. இவை சுரக்கும் உமிழ்நீர், உணவுப்பொருள் செரிப்பதற்கு உதவுகிறது. இது உணவில் உள்ள மாப்பொருளை, எளிதில் கரையும் சர்க்கரையாக (Maltose) மாற்றுகிறது. இதுவே செரித்தலின் முதற்படியாகும். மேலும், இது உணவை மென்று விழுங்குவதற்கு ஏற்றதாகச் செய்கிறது.


உணவை விழுங்கும்போது, நாக்கு உயர்ந்து உணவைப் பின்னோக்கித் தொண்டைக்குள் தள்ளுகிறது. தொண்டை புனல்போன்ற அமைப்புள்ளது. இது உணவுக் குழாயுடன் (Gullet) சேர்ந்துள்ளது. இதன் வழியாகவே உணவு இரைப்பைக்குச் செல்லும். மூக்கின் வழியாகச் செல்லும் மூச்சுக் குழாய், தொண்டையில் இந்த உணவுக் குழாயைக் கடந்து செல்கிறது. மூச்சுக் குழாய் எப்பொழுதும் திறந்திருக்கும். எனவே உணவு இம்மூச்சுக் குழாய்க்குள் சென்று விடாமல் தடுப்பதற்காகக் குரல்வளை மூடி (Epiglottis) என்னும் ஒரு சிறு தடுப்பு உள்ளது. இது மூச்சுக் குழாயை மூடிக்கொள்ளும்; அப்போது உணவுக் குழாய் வழியே உணவு செல்லும்.

வாய் வழியாகவும் மூக்கு வழியாகவுமே நோய்க் கிருமிகள் நம் உடலினுள் செல்கின்றன. எனவே இவற்றைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். வாயினால் மூச்சுவிடக் கூடாது. அதனால் நோய் உண்டாகக்கூடும். பற்களில் உணவுப்பொருள் தங்கினால் அது அழுகிக் கிருமிகள் உண்டாகும். இவை உணவுடன் கலந்து வயிற்றினுள் சென்று நோய் உண்டாக்கும். எனவே பற்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

கையைச் சுத்தம் செய்யாமல் உண்பதாலும், நகத்தைக் கடிப்பதாலும், கிருமிகள் வாய்க்குள் சென்று நோயுண்டாக்கும். வாயில் புண் முதலிய சில நோய்கள் இன்னும் சில காரணங்களால் உண்டாகும். இவை ஏற்பட்டால் உணவு உட்கொள்ளவே இயலாமல் துன்புற நேரிடும். இவற்றைத் தவிர்க்க, வாயை-