பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வாயு

எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள் வது இன்றியமையாதது.


வாயு (Gas) : எந்த ஒரு பொருளும் திடநிலை, திரவநிலை அல்லது வாயுநிலை இவை மூன்றில் ஒரு நிலையில் இருக்கும். கல், நாணயம், பாத்திரம் இவை திட நிலையில் உள்ள பொருளுக்கு எடுத்துக்காட்டுகள். நீர், பாதரசம், எண்ணெய் இவை திரவங்கள். ஆக்சிஜன், கார்பன் டையாக்சைடு இவை வாயுக்கள். காற்றும் வாயுநிலையிலுள்ளது தான். ஆனால் இது பல வாயுக்கள் சேர்ந்த ஒரு கலவையாகும்.

வாயுக்களில் பெரும்பாலானவற்றுக்கு நிறமோ, மணமோ கிடையாது. ஆக்சிஜன், ஹைடிரஜன், நைட்ரஜன், கார்பன் டையாக்சைடு இத்தகையவை. நைட்ரஜன் டையாக்சைடு பழுப்பு நிறமுள்ள வாயு. குளோரின் பச்சை கலந்த மஞ்சள் நிறம். இதற்கு ஒருவித நாற்றமும் இருக்கும். ஹைட்ரஜன் சல்பைடு வாயு அழுகிய முட்டையின் நாற்றத்தைக் கொண்டது.

திட, திரவ நிலையிலுள்ள பொருள்களை விட வாயுக்கள் எடை மிகக் குறைந்தவை. திட நிலையிலுள்ள பொருளுக்கு அதற்கே உரிய ஒரு வடிவம் உண்டு. திரவம் அது வைக்கப்படுகின்ற கலத்தின் வடிவை அடைகிறது. அதற்கு ஒரு மேற்பரப்பு உண்டாகிறது. வாயுவுக்கு அத்தகைய பரப்பு உண்டாவதில்லை. மேலும், ஒரு கலத்தில் அதன் கொள்ளளவைவிட அதிக அளவு திரவத்தை நிரப்ப முடியாது. ஆனால் எந்த ஒரு வாயுவையும் மிகச் சிறிய இடத்திலும் நன்கு அழுத்தி அடைத்து வைக்க முடியும்.

ஒரு வாயுவை நன்கு அழுத்தி அடைத்துவைத்தால், அதன் அழுத்தம் (Pressure) அதிகமாகிறது. கன அளவு (Volume) குறையக் குறைய வாயுவின் அழுத்தம் அதிகமாகும். கன அளவை அதிகரித்தால் அழுத்தம் குறையும். குறிப்பிட்ட ஒரு வெப்ப நிலையில், வாயுவின் அழுத்தமும், கன அளவும் தலைகீழ் விகிதத்தில் வேறுபடும். இது எல்லா வாயுக்களுக்கும் பொருந்தும்.

வாயுவிலுள்ள மூலக்கூறுகள் (த.க.) ஒன்றுக்கொன்று மிகவும் விலகியிருக்கின்றன. இவை தாம் அடங்கியுள்ள கலத்தினுள் மிக வேகமாக இங்குமங்கும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. அதனால் இவை ஒன்றோடொன்றும், கலத்தின் சுவர்களிலும் மோதிக் கொண்டே இருக்கின்றன. இதன் விளைவாக ஓர் அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே 'வாயுவின் அழுத்தம்' ஆகும்.

ஆக்சி- அசிட்டிலீன் வாயுக் கலவையின் தீச்சுடரைக்
கொண்டு உலோகப் பாளத்தை வெட்டுகிறார்கள்

வாயுக்களைக் குளிரவைத்தால், அவை திரவமாக மாறும். இவற்றுள் சிலவற்றை மேலும் குளிரவைத்துத் திடநிலைக்கும் மாற்றலாம். அதைப்போல, திடநிலையிலுள்ள ஒரு பொருளை நன்கு சூடு படுத்தினால் அது திரவமாக மாறும். மேலும் சூடுபடுத்தினால் அது ஆவியாகும். அதாவது, வாயுநிலையை அடையும். இவ்வாறு எந்தப் பொருளையும் வாயு நிலைக்கு மாற்றமுடியும் என்றாலும், சாதாரண வெப்பநிலையில் வாயு நிலையில் இருக்கும் பொருளையே பொதுவாக வாயு என்கிறார்கள்.

வாயுக்களில் சில நச்சுத் தன்மையுள்ளவை. குளோரின் அவற்றுள் ஒன்று. பாக்ட்டீரியங்களைக் கொல்வதற்காகக் குழாய் நீரில் இவ்வாயு மிகச் சிறிதளவு கலக்கப்படுகிறது. எனினும் அதனால் நமக்குத் தீங்கு ஏதும் இல்லை. ஆனால் இதைச் சுவாசித்தால் தொண்டையைப் பாதிக்கும். மரணமும் நேரிடலாம். பாஸ்ஜீன், கார்பன் மானாக்சைடு (த.க.) இவையும் நச்சு வாயுக்களே. மோட்டார் வண்டிகளிலிருந்து வரும் புகையில் கார்பன் மானாக்சைடு அதிக அளவில் உள்ளது.

பெரும்பாலான வாயுக்களால் நன்மைகள் பல உண்டு. பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கை வாயு (த.க.) சிறந்த எரிபொருள் ஆகும். நிலக்கரியிலிருந்து பெறும் நிலக்கரி வாயுவும் (Coal-gas) சிறந்த எரிபொருளே. இவை தொழிற் சாலைகளிலும் வீடுகளில் அடுப்பு எரிக்கவும் பயன்படுகின்றன. விளக்குகளையும் எரிக்கலாம்.

மிக அதிக வெப்பநிலையில் எரியும் வாயுக்களைக் கொண்டு உலோகங்களை வெட்டலாம். இதற்கு ஹைடிரஜன்,