பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாயுமண்டலம்

29

அசிட்டிலீன், புரோப்பேன் வாயுக்கள் பயன்படுகின்றன. இவற்றுள் ஒன்றை ஆக்சிஜன் வாயுவுடன் கலந்து எரிப்பதால் உண்டாகும் தீச்சுடரின் வெப்ப நிலை சுமார் 2000 வரை இருக்கும். உலோக உறுப்புகளைப் பெரிய உலோகத் தகட்டிலிருந்து வெட்டியெடுக்க இம்முறை கையாளப்படுகிறது. இதைப் படத்தில் காணலாம். உலோகங்களை ஒன்றோடொன்று சேர்த்துப் பற்றவைக்கும் (Welding) தொழிலிலும் இம்முறை பயன்படுகிறது.

வாயுக்களில் முக்கியமானவை ஆக்சிஜன், ஹைடிரஜன், நைட்ரஜன், கார்பன் மானாக்சைடு, கார்பன் டையாக்சைடு, குளோரின், அம்மோனியா, அசிட்டிலீன் முதலியவை. இவற்றுள் பலவற்றுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டு. அக்கட்டுரைகளைப் படித்து அந்த வாயுக்களின் பண்புகள், பயன்கள் முதலியவற்றை அறியலாம்.


வாயுமண்டலம் (Atmosphere): பூமியைச் சுற்றிலும் காற்று பரவியிருக்கிறது அல்லவா? இந்தக் காற்று பரவியுள்ள பகுதி வாயுமண்டலம் ஆகும். இது பூமியின் தரைமட்டத்திலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரம் வரை உள்ளது. பூமியை அடுத்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம்வரை உள்ள வாயு மண்டலத்திற்கு வாயுமண்டலக் கீழ்ப் பகுதி (Troposphere) என்று பெயர். இந்தப் பகுதியில் தான் மேகங்கள் உருவாகின்றன. காற்று வீசுவதும், இடி மின்னல், புயல் உருவாவதும் இப்பகுதியில் தான். தரைமட்டத்திலிருந்து மேலே போகப்போகக் காற்றின் அடர்த்தி குறைந்துவிடுகிறது. எவரஸ்ட் சிகரப் பகுதிகளில் (சுமார் 8 கிலோமீட்டர் உயரத்தில்) காற்றின் அடர்த்தி மிகவும் குறைவு. அத்தகைய உயரமான மலைப் பகுதிகளுக்கு ஏறிச் செல்பவர்கள் மூச்சு விடுவதற்குத் தம்முடன் ஆக்சிஜன் அடங்கிய கலங்களை எடுத்துச் செல்ல வேண்டும். மலைகளின் மீது உயரே செல்லச் செல்ல வெப்பநிலையும் குறையும்.

வாயுமண்டலக் கீழ்ப்பகுதிக்கு அப்பால் சுமார் 80 கிலோமீட்டர் உயரம்வரை இருப்பது அடுக்கு வாயுமண்டலம் (Stratosphere). இப்பகுதியில் மேகங்கள் உருவாவதில்லை. இங்குக் காற்றின் அடர்த்தி மிகவும் குறைவு. அதனால் ஒலி பரவுவதில்லை. இப்பகுதியில் சுமார் 15 கிலோமீட்டர் உயரத்தில் வெப்பநிலை பனி உறை நிலையைவிட சுமார் 75° வரை குறைந்திருக்கிறது.

சூரியனிலிருந்து வரும் புறவூதாக் கதிர்கள் (த.க.) அடுக்கு வாயுமண்டலத்தை அடைந்ததும், காற்றிலுள்ள ஆக்சிஜன் அவற்றை ஈர்த்துக்கொள்கிறது. விசுவக் கதிர்களும் (த.க.) இப்பகுதியிலுள்ள காற்றுடன் மோதும் போது கதிரியக்கம் (த.க.) உண்டாகிறது. இதன் விளைவாக வெளிப்படும் கதிர்களை வாயுமண்டலம் ஈர்த்துக் கொள்கிறது. விசுவக் கதிர்களில் 1% தான் தரைமட்டத்தை வந்தடைகிறது. இவ்வாறு இக்கதிர்களால் தீங்கு உண்டாகாமல் வாயுமண்டலம் நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

அடுக்கு வாயுமண்டலத்திற்கும் மேலேயுள்ள பகுதி மின்னணு மண்டலம் (Ionosphere) எனப்படும். இது சுமார் 400 கிலோமீட்டர் உயரம் வரை பரவியிருக்கிறது. அடுக்கு வாயுமண்டலத்தில் வெப்பநிலை பனி உறை நிலைக்கும் கீழே குறைந்திருக்கிறதல்லவா? ஆனால் மின்னணு மண்டலத்தின் தொடக்கப் பகுதியில் புறவூதாக் கதிர்கள் தாக்கும்போது ஆக்சிஜன் மூலக்கூறுகள் சிதைந்து தனிவகை அணுக்களாகின்றன; வெப்பம் உண்டாகிறது. இதன் விளைவாக இப்பகுதியில் வெப்பநிலை உயர்கின்றது. மேலே போகப்போக வெப்பநிலை மேலும் அதிகரித்து சுமார் 2000° உச்சநிலையை அடைகிறது. மின்னணு மண்டலத்தில் மின் துகள்கள் பெரும்பாலும் உள்ளன. வாயுமண்டலத்தின் இந்தப் பகுதி ரேடியோ அலைகளைப் பிரதிபலிக்கின்றது. வானொலி நிலையத்தார் ஒலிபரப்பும் ரேடியோ அலைகள் இந்தப் பகுதிவரை வந்து பிரதிபலிக்கப்படுகின்றன. நம் வீட்டிலுள்ள வானொலிப்பெட்டிகள் பிரதிபலிக்கப்பட்ட இந்த அலைகளை வாங்கிக் கொள்கின்றன. இவ்வாறு வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கிறோம்.

விமானத்தில் சென்றும், பலூன்களில் சில கருவிகளை வைத்து அனுப்பியும் மிக அதிக உயரத்திற்கு ராக்கெட்டுகள், செயற்கைக் கிரகங்கள் (த.க.) இவற்றை அனுப்பியும் வாயு மண்டலத்தை ஆராய்ந்து வருகிறார்கள். வாயுமண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அழுத்தம் வெப்பநிலை, ஈரப்பதன் முதலியவற்றை அளவிடப் பலவகைக் கருவிகள் பயன்படுகின்றன. வாயுமண்டலப் பகுதிகளைப் பற்றிய அறிவு வானிலை ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படுகிறது.

வாயுமண்டலத்தால் நமக்குப் பலவித நன்மைகள் உண்டு. நாம் உயிர்வாழ்வதற்குக் காற்று இன்றியமையாதது. சூரியனிலிருந்து வெளிப்படும் புறவூதாக்-