பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வார்ப்புவேலை

கதிர்களையும், விசுவக் கதிர்களையும் ஈர்த்து நமக்குப் பாதுகாப்பு அளிப்பதோடு, இரவில் பூமி கடுமையாகக் குளிர்ச்சி யடைந்துவிடாமல், வாயுமண்டலம் வெப்பத்தைத் தேக்கிவைத்துச் சிறிதுசிறிதாகப் பரவவிடுகிறது. இதனால் சீரான வெப்ப நிலை நிலவுகிறது. விண்ணிலிருந்து விழும் எரிநட்சத்திரங்கள் வாயு மண்டலத்தின் மேற்பகுதியை அடைந்ததுமே உராய்ந்து சூடேறி எரிந்துவிடுவதால் அவை பூமியில் தீங்கு விளைவிப்பதில்லை.


வார்ப்புவேலை (Casting): கோயில்களிலும், பொருட்காட்சிசாலை களிலும் உலோகங்களாலான சிலைகளைப் பார்க்கிறோம்.மோட்டார் வண்டிகளிலும், எந்திரங்களிலும் பல்வேறு வடிவங்களில் உறுப்புகளைக் காண்கிறோம். இவற்றில் பலவற்றை உருவாக்குவதற்கு வார்ப்புவேலை பயன்படுகிறது. தேவையான வடிவங்களில் அச்சுகள் அல்லது வார்ப்புகளைச் செய்து, அவற்றில் உலோகங்களை உருக்கி ஊற்றிக் குளிரச்செய்து சிலைகளையோ எந்திர உறுப்புகளையோ தயாரிக்கிறார்கள்.

உருவாக்க வேண்டிய பொருள்களின் வடிவங்களுக்கு ஏற்ற வார்ப்பைத் தயாரிப்பது முதல் வேலையாகும். பொருளில் மேடாக உள்ள பகுதி, வார்ப்பில் பள்ளமாகவும், பள்ளமாக உள்ள பகுதி வார்ப்பில் மேடாகவும் இருக்கும். தனி வகையில் தயாரிக்கப்பட்ட மணலினால் இந்த வார்ப்பு செய்யப்படுகிறது.

வார்ப்பு தயாரிப்பதற்கு ஒரு மாதிரி வடிவம் தேவை. தேக்குமரத்திலோ உலோகத்திலோ இந்த மாதிரி வடி வத்தை இரண்டு பகுதிகளாகச் செய் வார்கள். வார்ப்புவேலைக்கு இரும் பிலைான பெட்டியொன்றும் பயன் படுகிறது. இந்தப் பெட்டி வார்ப்பு இரும்பு (Cast iron) என்ற ஒருவகை இரும்பினாலானது. வார்ப்புப் பெட்டியும் இருபகுதிகளாக அமைந்திருக்கும். இப் பெட்டியின் ஒரு பகுதியில், தனிவகை மணலைப் பாதியளவு போட்டு நன்கு கெட்டிப்படுத்துவர். பின்னர், மாதிரி வடிவத்தின் ஒரு பகுதியை இம்மணலின் மீது சரியாக வைத்து, மீண்டும் சுற்றிலும் மணலைப் போட்டு நன்கு கெட்டிப் படுத்துவர். சிறிது நேரம் கழித்து, பெட்டியிலுள்ள மாதிரி வடிவத்தின் பகு தியை மெள்ள எடுத்துவிட்டால், மணலில் மாதிரி வடிவத்தின் ஒரு பகுதி உட் கூடாகப் பதிந்திருக்கும். பெட்டியின் மற்றொரு பகுதியிலும் இதுபோலவே தனிவகை மணலைப் போட்டு, மாதிரி

வார்ப்புப் பெட்டி

வார்ப்புப் பெட்டி

உலோகக் குண்டு ஒன்றைச் செய்வதற்கான வார்ப்பட அமைப்பு

வடிவத்தின் இன்னொரு பகுதியின் உருவத்தை உண்டாக்குவர். பின்னர், பெட்டியின் இருபகுதிகளையும், சரியான நிலையில் பொருந்தும்படி இணைத்துவிடுவார்கள். பெட்டியை நன்கு மூடிவிட்டு, பெட்டியின் மேலுள்ள ஒரு துளையின் வழியே உருகிய உலோகத்தை ஊற்றுவர். உருகிய உலோகம் உட்கூடான பகுதியில் ஓடிப் பரவும். இந்த வார்ப்பை நன்கு குளிரும்வரையில் ஆறவைப்பர். பிறகு வார்ப்புப் பெட்டியைத் திறந்து பார்த்தால், மாதிரிவடிவம் போன்ற உலோக அச்சு (வார்ப்பு) உருவாகியிருக்கும். இந்த அச்சு உருவத்தை எடுத்து மெருகு கொடுப்பார்கள்.

உட்கூடான பெரிய உருளைகளைச் செய்வதற்கு, உட்கூடான உருளை வடிவ வார்ப்பினுள் உருகிய உலோகத்தை ஊற்றி, வார்ப்பை வேகமாகச் சுழலச் செய்வார்கள். சுழலும் வேகத்தில் உருகிய உலோகம் வார்ப்பின் உட்சுவரில் படிந்து ஒட்டிக்கொள்ளும். உலோகம் குளிர்ந்தவுடன் உட்கூடான உருளைகள் கிடைக்கும். இதை மையவிலக்கு வார்ப்பு வேலை (Centrifugal casting) என்பர்.

மிகவும் நுட்பமான வடிவங்களை வார்ப்பதற்கு மெழுகைப் பயன்படுத்துகிறார்கள். மெழுகினால் வடிவம் செய்து, அதன்மேல் ஒருவகைக் களிமண்ணைப் பூசுவர். இந்தப் பூச்சின் ஓரிடத்தில் துவாரம் செய்துவிடுவர். பூச்சு காய்ந்ததும், அதைச் சூடாக்கினால், மெழுகு உருகி துவாரத்தின் வழியே வெளியே வந்துவிடும். பிறகு அந்தத் துவாரத்தின் வழியே, உருகிய உலோகத்தை ஊற்றி நிரப்புவார்கள். உலோகம் குளிர்ந்து கெட்டியானதும், களிமண் வார்ப்பை உடைத்து உலோக வடிவை எடுப்பார்கள். மோட்டார் வண்டி, விமானம்