பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வால் நட்சத்திரம் - வால்ரஸ்

31

போன்றவற்றின் உறுப்புகளைத் தயாரிக்கவும், சிலைகளை வார்க்கவும் இந்த முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

வார்ப்பு வேலை செய்ய இரும்பு, எஃகு, செம்பு, அலுமினியம், மக்னீசியம், பித்தளை, வெண்கலம் முதலிய உலோகங்களும், உலோகக் கலவைகளும் பயன்படுகின்றன.


வால்நட்சத்திரம் (Comet): பூமியும், மற்றக் கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன அல்லவா? அவைபோன்று வால் நட்சத்திரங்களும் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றிவருகின்றன. வால் நட்சத்திரம் உண்மையில் ஒரு நட்சத்திரமல்ல. இது சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒளிரும்பொருளே (Luminous body) ஆகும். இதைத் தூமகேது என்றும் சொல்வார்கள்.

சூரியனிலிருந்து வெளிநோக்கிப் பாயும் கதிர்கள் மிகுந்த அழுத்தமுள்ளவை. வால் நட்சத்திரம் சூரியன் அருகே வரும்போது தலைப்பகுதியிலுள்ள வாயுவையும் துகள்களையும் இக்கதிர்கள் எதிர்ப்புறம் தள்ளுகின்றன. எனவே இப்பகுதி நீண்டு வால்போல் தோன்றுகிறது.

வால் நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. பெரும்பாலானவை கண்ணுக்குத் தெரிவதில்லை. தொலைநோக்கி (த.க.) மூலம் தான் அவற்றைப் பார்க்க முடியும். வால் நட்சத்திரத்தின் மையப்பகுதி மிகுந்த ஒளியுடன் கூடியது. இதைச் சுற்றி வாயுக்கள் நிரம்பியுள்ள பகுதியும் சேர்ந்து இதன் தலைப்பகுதி யாகும். இது சுமார் 50,000 கிலோ மீட்டர் முதல் 1,50,000 கிலோமீட்டர் வரை விட்டமுடையது. சிலவற்றில் வால் பகுதி சுமார் 16 கோடி கிலோமீட்டர் நீளமுள்ளதாகவும் இருக்கும்.

என்க்கே (Encke) என்ற வால் நட்சத்திரம் மூன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும். ஹாலீ (Halley) வால்நட்சத்திரம் 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும். இது மீண்டும் 1986-ல் தோன்றும். இவற்றைக்கண்டு

1957-ல் தெரிந்த ஆரண்ட்-ரோலண்ட் வால் நட்சத்திரம்

1957-ல் தெரிந்த ஆரண்ட்-ரோலண்ட் வால் நட்சத்திரம்

பிடித்த விஞ்ஞானிகளின் பெயர்களே இந்த வால் நட்சத்திரங்களுக்கு இடப்பட்டிருக்கின்றன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரங்களும் உள்ளன. 1974-ல் தோன்றிய கொஹுட் டெக் (Kohoutek) என்ற வால் நட்சத்திரம் இத்தகையது. இது 80,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றக் கூடியது. 1974 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தோன்றிய இந்நட்சத்திரம் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டது. சில இடங்களில் தொலைநோக்கிக் கண்ணாடியின் உதவியின்றியே இதனைக் காணமுடிந்தது.


வால்ரஸ் (Walrus) : கடலில் வாழும் பெரிய பாலூட்டி விலங்கு வால்ரஸ். இது சீல் (த.க.) என்ற விலங்கின் இனத்தைச் சேர்ந்தது. இது பசிபிக் வால்ரஸ், அட்லான்டிக் வால்ரஸ் என இருவகைப்படும். வால்ரஸின் மேல் தாடையிலுள்ள இரு கோரைப் பற்கள் நீண்டு தந்தம் போல் வளர்ந்திருக்கும். சீல்களுக்கு இவ்விதம் வளர்வதில்லை. இதுவே இவ்விரு விலங்குகளுக்குமுள்ள முக்கிய வேறுபாடாகும். தந்தங்கள் ஒரு மீட்டர்வரை நீளமிருக்கும். ஆண், பெண் இரண்டுக்கும் தந்தம் உண்டு. சீல்களைக் காட்டிலும் வால்ரஸ்கள் பெரியவை.

வால்ரஸ் வட துருவத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கிறது. இது கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புள்ளது. முழு வளர்ச்சியடைந்த விலங்கு மூன்று அல்லது நான்கு மீட்டர் வரை நீளமிருக்கும். உடல் மிகப் பருமனானது. கண்கள் சிறியவை. முகத்தின் இரு பக்கங்களிலும் விரைப்பான மீசை மயிர் வளர்ந் திருக்கும். கால் விரல்கள் சவ்வுபோன்ற தோலினால் இணைக்கப்பட்டுள்ளன. இது கால்களைத் துடுப்பு போலப் பயன்படுத்திக் கொண்டு வேகமாக நீந்தும். கால்களின் அடிப்புறம் சொரசொரப்பாக இருக்கும். வழுக்கும் பனிக்கட்டியின் மீது பற்றி ஏறுவதற்கு இவை உதவுகின்றன. பனிக் கட்டிமீதோ பாறைமீதோ படுத்து வெயில் காய இவ்விலங்குக்கு விருப்பம் அதிகம்.

நண்டு, நத்தை முதலியன இவ்விலங்கின் உணவாகும். கடற்கரையில் புதைந்துள்ள கிளிஞ்சிலையும் இது உண்ணும். இவற்றைக் கிளறி எடுப்பதற்கு இதன் தந்தங்கள் பயன்படுகின்றன. தீங்கு செய்யும் பிற விலங்குகளைத் தாக்கு வதற்கும் தந்தங்கள் உதவியாக உள்ளன. வால்ரஸ் நீரில் வாழ்ந்தாலும் நிலத்தில் தான் குட்டிபோடும். குட்டி இரண்டு ஆண்டுகள் வரை தாயிடம் பால் குடிக்கும்.