பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

லினோயம்

3

களைக் கட்டுகளாகக் கட்டி, வெயிலில் நன்கு உலரவிடுவர். பின் ஒருவகையான சீப்பினால், இலை விதை முதலியவற்றை அகற்று வார்கள். அதன் பிறகு தண்டுகளை நீரில் ஊற வைப்பார்கள். நன்கு ஊறியபின் அவற்றை உலரவைத்து உருளைகளிடையே செலுத்தினால், தண்டிலுள்ள நார் நீங்கலாக மற்ற பகுதி நொறுங்கித் தூளாகி விடும். மற்றோர் எந்திரத்திலிட்டு இந்தத் தூளை அகற்றுகிறார்கள். பின்னர் நீளமான நார்களையும் குட்டையான தரம் குறைந்த நார்களையும் வெவ்வேறாகப் பிரிக்கிறார்கள். பிறகு பருத்தி நூல் நூற்பதைப்போலவே லினன் நார்களை நூலாக நூற்கிறார்கள். பருத்தித்துணி நெய்வதைப்போலவே லினன் துணியையும் நெய்கிறார்கள்.

பெரும்பாலும் கையினாலேயே லினன் நூல் நூற்கிறார்கள். நீண்ட காலமாக வீடுகளிலேயே நெசவும் நடைபெற்றது. இப்பொழுது லினன் நூல் நூற்பதற்கும், நெசவுக்கும் எந்திரங்கள் உண்டு.

சணல் நாரிலிருந்து சிலவகை முரட்டு லினன் துணிகளும், மெல்லிய லினன் துணிகளும் நெய்து வருகிறார்கள். முரட்டுத்துணி பாய்மரக் கப்பலுக்கான பாய்மரத்துணி யாகவும், கூடாரத்துணியாகவும், தார்ப்பாய், கோணி, திரைச்சீலை, விரிப்பு முதலியன தயாரிக்கவும் பயன்படுகிறது. மெல்லிய லினன் துணி மேசை விரிப்புக்கும், கைக்குட்டை, சட்டை, மற்றும் பலவகை ஆடைகள் நெய்யவும் ஏற்றது. மெல்லிய துணியில் அழகான பூத்தையல் வேலை செய்யலாம். லினன் துணிக்குச் சில தனித்தன்மைகள் . உண்டு. இது மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். பருத்தித் துணியைவிட இது மிகவும் உறுதியானது. ஈரத்தை எளிதில் உறிஞ்சக் கூடியது. மேலும், இது குளிர்ச்சி பொருந்தியதாக இருப்பதால் கோடைகாலத்தில் லினன் துணிகளால் தைத்த உடைகளை மக்கள் விரும்பி அணிகிறார்கள். தோலினால் செய்யப்படும் பொருள்களை உறுதியான லினன் நூலினால் தைக்கலாம்.

அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் லினன் தயாரிப்பதில் சிறந்து விளங்குகின்றன.


லினோலியம் (Linoleum) : கயிறு , நூல், உரோமம் முதலியவற்றால் நெய்யப்பட்ட அழகான கம்பளங்களை வீட்டுத் தரைகளில் விரிக்கிறோம். இன்று லினோலியம் என்னும் ஒருவகை மெருகிட்ட னாலியம் மெழுகுத் துணியும் பயன்படுகிறது. 1860ஆம் ஆண்டில் பிரடரிக் வால்ட்டன் (Frederick Walton ) என்ற ஆங்கிலேயர் இதைக் கண்டுபிடித்தார்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் சமுக்காளம் , கம்பளம் முதலியவற்றைத் தரையில் விரிப்பதற்குப் பயன் படுத்தி வந்தார்கள். தூசி புகாமல் இருக்க விரிப்புத் துணியின் மீது ஆளிவிதை எண்ணெயைப் (Linseed oil) பூசினார்கள். இதற்கு மெழுகுத்துணி என்று பெயர். இதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது. எனவே, குறைந்த விலையில் இத்தகைய தரை விரிப்புகளைப் பெற முயற்சி செய்தனர். இதற்கேற்ற வகையில் கண்டு பிடிக்கப்பட்டதே லினோலியம் ஆகும்.

லினோலியத்தை எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியுமா? ஆளி விதை எண்ணெயை நன்கு கொதிக்கவைத்துப் பல ரசாயன மாறுதல்களுக்கு உட்படுத்துவார்கள். இது உருகிய ரப்பர்போல் குழம்பாகிப் பின்னர் கெட்டியாகும். இவ்வாறு கெட்டியாகும் பொருளை ஒரு பாத்திரத்திலிட்டு மரப் பிசினும், கோந்தும் சேர்த்துச் சூடுபடுத்தினால் அது பசைபோலாகிறது.

பசைபோன்ற இந்தப் பொருளை ஒரு கலக்கும் எந்திரத்திலிட்டுத் தக்கைத்தூள், மரத்தூள், நிறமூட்டும் பொருள் முதலியவற்றைச் சேர்ப்பார்கள். இக்கலவை பின்னர் கெட்டியாகும். இதைத் தூளாக்கி, சணலால் நெய்யப்பட்ட பாய்த்துணியின்மீது ஒரே சீராகத் தூவுவார்கள். இத்துணியைச் சூடேற்றிய இரு உருளைகளுக்கிடையே செலுத்தும்போது 'லினோலியம் கலவை' இத்துணியில் அழுத்தமாகப் படிந்து மெருகு பெறுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட லினோலியத்தை வெப்பக் காற்றுள்ள அறைகளில் உலரவைத்து மேலும் பக்குவப் படுத்துவார்கள். இதனால் லினோலியம் இறுகி உறுதி பெறுகின்றது. லினோலியத்தின்மீது வண்ணக் கோலங்களை அச்சடிப்பதுண்டு. இவை நீடித்து இருப்பதில்லை. எனவே, லினோலியக் கலவையுடன் வண்ணங்களைச் சேர்த்து வண்ண மாதிரிகள் அல்லது ஓவியங்கள் நீடித்திருக்கக் கூடியவாறும் லினோலியம் தயாரிக்கப்படுகிறது.

லினோலியம் சுமார் இரண்டு மீட்டர் அகலமுள்ள நீண்ட விரிப்புகளாக விற்கப்படுகிறது. சதுர வடிவில் சிறிய துண்டுகளாகவும் கிடைக்கிறது. இவற்றைப் பசையிட்டுத் தரையுடன் ஒட்டிக்கொள்ளும்படி செய்கிறார்கள். லினோலியத் தரையைச் சுத்தம் செய்வது எளிது.