பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

லின்கன் - லினன்

கள் ஆயுள் முழுதும் வேலை செய்ய வேண்டும். மனிதர்களை ஆடுமாடுகளைப் போல் நடத்தும் இக்கொடிய அடிமை முறையை ஒழித்து, நீக்ரோ மக்களுக்கு விடுதலை அளித்து, உலகப்புகழ் பெற்றவர் அமெரிக்காவின் பதினாறாவது குடியரசுத் தலைவரான ஆபிரகாம் லின்கன்.

கூலி வேலை செய்பவராகவும் விறகு வெட்டியாகவும் இருந்து, தம் உழைப்பாலும் முயற்சியாலும் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியாகிய குடியரசுத் தலைவராக உயர்ந்தார் லின்கன். பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்லாமல் தம் சொந்த முயற்சியால் கல்விகற்று, மிகச் சிறந்த வழக்குரைஞராகவும் இவர் விளங்கினார்.

கென்டக்கி (Kentucky ) மாநிலத்தில் 1809 பிப்ரவரி 12ஆம் நாள் லின்கன் பிறந்தார். இவருடைய தந்தை மிகவும் ஏழை. அதனால் லின்கன் பள்ளிக்குச் செல்லவில்லை. தாமே எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். நண்பர்களிடம் நூல்களைக் கடனாக வாங்கிப் படித்து அறிவைப் பெருக்கிக் கொண்டார். தம் 21ஆம் வயதுவரை சிறுசிறு வேலைகள் செய்து குடும்ப வருமானத்துக்கு உதவி வந்தார்.

லின்கன் 1831-ல் நியூசேலம் என்ற நகரில் ஒரு மளிகைக் கடையில் வேலை ஏற்றார். தம்முடைய அறிவாற்றலாலும், நகைச்சுவையாலும் அந் நகர மக்களிடம் செல்வாக்குப் பெற்றார். 1834-ல் இல்லினாய்ஸ் மாநிலச் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இதற்கிடையில் சட்ட நூல்களைக் கற்று, 1835-ல் வழக்குரைஞரானார். வழக்குரைஞர் தொழிலில் இவர் பெரும்புகழ் பெற்றார். 1842-ல் மேரி டாட் (Mary Todd ) என்பவரை மணந்தார்.

அமெரிக்க நாடாளுமன்ற ( Congress ) உறுப்பினராக 1847-ல் லின்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அடிமை முறையை வன்மையாகக் கண்டித்து வந்தார். 1856-ல் அடிமை முறையை எதிர்ப்பதற்காகக் குடியரசுக் கட்சி ( Re publican Party) தோன்றியது. லின்கன் அக்கட்சியில் சேர்ந்து அதன் முன்னணித் தலைவர்களுள் ஒருவரானார்.

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் தோட்டங்களும், வேளாண்மைப் பண்ணை களும் மிகுதி. அவற்றில் வேலை பார்ப்பதற்கு அவற்றின் முதலாளிகள், நீக்ரோ அடிமைகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் அடிமை முறையை ஆதரித்தார்கள். ஆனால் வட மாநில மக்கள் அடிமை முறையை எதிர்த்தார்கள்.

இந்நிலையில் 1860-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக லின்கன் போட்டியிட்டு வென்றார். அடிமை முறையை ஒழிக்கும் எண்ணம் கொண்ட லின்கன் குடியரசுத் தலைவரானதைத் தென் மாநிலங்கள் விரும்பவில்லை. அவை தாங்கள் தனி நாடாகப் பிரிந்துபோவதாக அறிவித்தன. ஆனால், அவை அவ்வாறு பிரிந்து சென்றுவிடாமல் நாட்டின் ஒற்றுமையைக் காக்க லின்கன் உறுதி பூண்டார். தென் மாநிலங்களுக்கும் வட மாநிலங்களுக்குமிடையே 1861-ல் உள் நாட்டுப் போர் மூண்டது. இப்போரை லின்கன் உறுதியோடும் திறமையோடும் நடத்தினார். 1863 ஜனவரியில் அமெரிக்காவிலுள்ள அடிமைகள் அனைவரையும் விடுதலை செய்வதாகப் பிரகடனம் செய்தார். 1865-ல் தென் மாநிலங்கள் தோற்றன. உள்நாட்டுப்போர் முடிந்தது. அமெரிக்காவின் ஒற்றுமையைக் காப்பாற்றுவதில் லின்கன் வெற்றி பெற்றார்.

1865-ல் நடந்த தேர்தலில் லின்கன் மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்வு பெற்றார். ஆனால், சமாதான காலத்தில் தம்முடைய அன்புவழியில் நாட்டை நடத்திச் செல்வதற்கு லின்கனுக்கு வாய்ப்பு இல்லாமல் போயிற்று. 1865 ஏப்ரல் 14-ல் இவர் ஒரு நாடக அரங்கில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்தபோது, இவருடைய கொள்கையை அடியோடு வெறுத்த ஜான் வில்க்ஸ் பூத் (John Wilkes Booth) என்ற நடிகன் இவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். மறுநாள் காலையில் லின்கன் காலமானார். உலகமே இவரது மறைவுக்காகக் கண்ணீர் வடித்தது.


லினன் (Linen): ஒருவகைச் சணல் ( Flax ) செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் துணி லினன் எனப்படும். லினன் துணி வழவழப்பாகவும், உறுதியாகவும் இருப்பதால், பருத்தி நூலினால் நெய்யப்படும் துணிகளைவிட இது பல வகைகளில் சிறந்ததாகும்.

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர் லினன் துணி நெய்துவந்தனர். பண்டைக்கால எகிப்தியரின் கல்லறைகளில் அரசர்களின் உடல் மீது லினன் துணியைப் போர்த்தியிருந்தது அகழ்வாராய்ச்சியின்போது தெரியவந்தது. கிறிஸ்தவ வேத நூலாகிய பைபிளிலும் லினன் துணியைப் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.

லினன் தயாரிப்பதற்குச் சணல் செடியைப் பலவழிகளில் பக்குவம் செய்து நார் எடுக்கிறார்கள். சணல் செடியைத் தக்க பருவத்தில் அறுவடை செய்து, தண்டு