உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“கோபக்காரன் என்றே ஊரிலுள்ளோர்—என்னைக்
கூறிடுவா ரன்றோ? ஆதலினால்
கோபத்தைக் காசியில் விட்டுவந்தேன்”—என்றே
கூறினார் மறுமொழி தாத்தாவுமே.

கண்ணனும் உடனேயே, “தாத்தா,தாத்தா நீயும்
காசியில் விட்டதும் என்ன?”என்றான்.
“இந்நேரம் கோபத்தை விட்டதாய்ச் சொன்னேனே…
எங்கே கவனமோ?” என்றுரைத்தார்.

முரளியும், “தாத்தா நீவிட்டதென்ன?” — என்றே
மீண்டும் ஒருமுறை கேட்டிடவே
திரும்பவும் “கோபத்தை விட்டே”னென்றே — தாத்தா
செப்பினர் முரளியும் “ஓகோ”என்றான்.

அருணனும் கோபுவும் அழகப்பனும் — இன்னும்
அலமுவும் கீதா காவேரியுமே
திரும்பத் திரும்ப இக்கேள்விதனைக் — கேட்கச்
சீறி எழுந்தனர் தாத்தாவுமே!

“வேலையற்ற வெட்டிப் பிள்ளைகளா — என்ன
வேடிக்கையா இங்கே காட்டுகின்றீர்?
தோலை உரித்தே எடுத்திடுவேன்” என்றுசொல்லியே
கையில் தடி எடுத்தார்!


98