பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

அவளைக் கண்டதும் என் பெண்ணுக்கு உண்டான சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உங்களுக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளைக் கண்டால் சந்தோஷமாயிருக்குமல்லவா? புதிதாகப் பிறந்த குழந்தை தூங்கும். பொழுது சிரித்துக் கொண்டே தூங்கும் என் பெண் அதைப் பார்த்துப் பார்த்து மகிழ்வாள். குழந்தைக்கு அம்மா பால் கொடுக்கும் பொழுது அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு குழந்தையின் காலையும் கையையும் தொட்டு “அம்மா! பட்டுப்போல் எவ்வளவு மிருதுவாயிருக்கிறது! ரோஜாப் பூப்போல் எவ்வளவு அழகாயிருக்கிறது!” என்று மகிழ்ந்து கொண்டிருப்பாள்.

இப்படி யிருக்கும் பொழுது ஒரு நாள் அவள் திடீரென்று ஓடிவந்து “அப்பா! தங்கச்சி அம்மா வயிற்றிலிருந்து எப்படி வந்தாள்?” என்று என்னிடம் கேட்டாள். குழந்தைகள் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டுமல்லவா?இல்லையானால் உங்களுக்குத் திருப்தி உண்டாகாதல்லவா? அதனால் அவளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

உலகத்தில் காணப்படும் விஷயங்களை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். அது நம்முடைய அறிவைப் பெருக்கும்; ஆனந்தமாகவும் இருக்கும். ஆனால் நாம்எ ப்படி இந்த உலகத்தில் பிறந்தோம் என்றவிஷயத்தை விபரமாக அறிவது அதையெல்லாம்விட அற்புதமாயிருக்கும். இந்த அற்புதத்தைச் சொல்லும்படியே என் குழந்தை கேட்டாள். அவளுடைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்லச்சொல்ல அவளுக்கு அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அவளுக்கு எப்படிச் செடி கொடிகள்,பறவைகள்,மிருகங்கள் பிறக்கின்றன என்பதைக் கூறி குழந்தை பிறப்பதையும் விபரமாகச் சொன்னேன். அதெல்லாம் அறிய உங்களுக்கும் ஆனந்தமாயிருக்கும்.

அத்துடன் நாம் எப்படி வாழ்ந்தால் நல்ல ஆரோக்கியமும் அழகும் பலமும் உள்ள குழந்தைகள் பிறப்பார்கள் என்பதையும் அவளுக்குச் சொன்னேன். அவள் அப்படியே நடப்பதாகக் கூறுகிறாள். நீங்களும் அப்படியே நடக்க வேண்டும். அப்பொழுதான் நாம் எல்லோரும் சந்தோஷமாக வாழ்வோம்.

பொ. திருகூடசுந்தரம்