பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


அப்பா!--ஆமாம், போய்விடுகிறது. அதன் பிறகு சேவற்கோழி பெட்டைக் கோழியைக் கவனிக்கிறதா? நீ பார்க்கிறாயா, அம்மா?

பாப்பா:--அப்பா! அதற்குப் பிறகு எங்கே கவனிக்கிறது? அது வேறு தெருவுக்குக்கூடப் போய்விடுகிறதே, அப்பா!

அப்பா:--பார்த்தாயா, அம்மா! நாம் எல்லாம் சேர்ந்து வாழ்கிறோமே அம்மா அப்பா குழந்தைகள் எல்லாம் ஒரே குடும்பமாக வாழ்கிறோமே, அப்படி அவைகள் வாழ்கின்றனவா, அம்மா?

பாப்பா:--இல்லை, அப்பா! அது மட்டுமா? தங்கச்சி அம்மா வயிற்றுக்குள் வளர்ந்து வந்ததாகச் சொன்னயே! அப்பொழுது அம்மா வாந்தி செய்தாள், எவ்வளவோ கஷ்டப்பட்டாள். அப்பொழுதெல்லாம் அப்பா! நீ அம்மாவுக்கு எவ்வளவு உதவி செய்தாய். நான்கூட பார்த்தேனே, அப்பா!

அப்பா:--ஆம், அம்மா! நாம் எல்லாம் கோழிகள் மாதிரி நடப்போமா! நமக்குக் குழந்தை உண்டாயிருக்கிறது என்று தெரியும். அப்பொழுது அம்மாவுக்குக் கஷ்டமாயிருக்கும் என்று தெரியும். இதெல்லாம் கோழிக்கோ இதர பிராணிகளுக்கோ தெரியுமோ?

பாப்பா:--தெரியாது, அப்பா! நமக்கு அம்மா குழந்தை பெறும்போது கஷ்டமாயிருக்கும் என்று தெரியும். அதனால்தானே அப்பா! நீ அம்மா தங்கச்சியைப் பெறும்பொழுது டாக்டர் மாமாவைக் கூட்டி வந்தாய்.

அப்பா :--ஆம், அம்மா! அது மட்டுமா? நீயும் தங்கச்சியும் எங்களுக்குப் பிறந்திருக்கிறீர்கள். உங்களை நாங்கள் எவ்வளவு அன்பாகக் கவனித்து வருகிறோம்? உனக்குத் தெரியுமல்லவா?