உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழலை மொழி

1. முத்தந் தா

கண்ணே! மணியே! முத்தந் தா,
      கட்டிக் கரும்பே! முத்தந் தா ;
வண்ணக் கிளியே! முத்தந் தா,
      வாசக் கொழுந்தே! முத்தந் தா. 1

தேனே! பாலே! முத்தந் தா,
      தெவிட்டாக் கனியே! முத்தந் தா ;
மானே! மயிலே! முத்தந் தா,
      மடியில் வந்து முத்தந் தா. 2

2. தாலாட்டு

ஆராரோ? ஆராரோ?
      ஆரிவரோ? ஆராரோ? 1

மாமணியோ? முத்தோ?
      மரகதமோ? மன்னவர்தம்
தாம முடிமீது
      தயங்கும் வயிரமதோ? 2

முல்லை நறுமலரோ?
     முருகவிழ்க்குந் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
     மருக்கொழுந்தோ? சண்பகமோ? 3