பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அளவாலும் பெரியனவாயுள்ள நூல்களையே மேலைநாட்டினர் மதிப்பர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். மிகச் சிறியதை ஒரு நூலாக அவர்கள் மதிப்பதில்லையாம். அதற்கேற்பவே, பிரெஞ்சு மொழி நூல்கள் மிகப் பெரியனவாயிருப்பதைக் காண்கிறேன். இந் நிலைமை, மேலைநாட்டினரின் படிக்கும் ஆர்வத்தையும் ஆற்றலையும் அறிவிக்கிறது. நம்மவர் பலர் இவ்வளவு பெரிய நூல்களைக் கண்டதும் வேர்த்து விறுவிறுத்துப் பெருமூச் செறிகின்றனர். இது நம்மவர்க்குப் படிக்கும் ஆர்வமும் ஆற்றலும் மிகவும் குறைவு என்பதை அறிவிக்கிறது. இந்த இரங்கத்தக்க எளியநிலை இனி மாறவேண்டும்.

வழக்குச் சொற்களையும்ம கலந்து ஓரளவு எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். குறிப்பிட்ட ஒரு கொள்கையை வற்புறுத்துவதற்காகவும் தெளிவுபடுத்துவதற்காகவும். சில விடங்களில், முன்பு தெரிவித்த கருத்தையே மீண்டும் தெரிவித்திருக்கிறேன். உரிய இடங்களில் தக்க முறையில் படவிளக்கமும் செய்துள்ளேன். இந்நூல் இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பெற்றால், ‘கெடிலக்கரை நாகரிகம் என்னும் சிறப்புப் பெயர் வாயிலாக, பொதுவாகத் ‘தமிழர் நாகரிகம்’ வெளியுலகிற்கு விளக்கமாகும்.

யான் சென்ற விடங்களிலெல்லாம் கருத்துகள் வழங்கிய அன்பர்கட்கும், படங்கள் எடுத்து உருவாக்க உதவிய நண்பர்கட்கும். இதனை நன்முறையில் வெளியிட்டுள்ள மெய்யப்பன் தமிழாய்வகத்திற்கும் நன்றி செலுத்துகிறேன்.

அரிய ஆய்வு நூல்கள் வெளியிடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சிறந்த நூல்களை வெளிக்கொணரும் பேராசிரியர் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்.

சுந்தர சண்முகன்