பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

149


என்றெல்லாம் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ளார். சேதியரால் ஆளப்பட்டதால் நாடு ‘சேதி நாடு’ எனப்பட்டது.

ஆட்சியும் மாட்சியும்

மெய்ப் பொருள் வேந்தர் அறநெறி வழுவாமல் நாடுகாத்தார்; சிறந்த வீரமும் வலிமையும் உடையராய் விளங்கினார்; போர் முனைகள் பல வென்றார். முத்தநாதன் என்னும் பகை மன்னன் ஒருவன் மெய்ப்பொருள் வேந்தரை வென்று சேதிநாட்டைப் பறித்துக் கொள்ளப் பலமுறை முயன்று படையெடுத்துப் பார்த்தான்; ஒவ்வொரு முறையும் தோல்வியே அவனுக்குக் காத்துநின்றது; எனவே, குதினால் வெல்லச் சூழ்ச்சி செய்தான்.

புராண வரலாறு

மெய்ப் பொருள் மன்னர் படைவீரத்துடன் கொடை வீரமும் உடையவராய்த் திகழ்ந்தார்; புலவர்களைப் போற்றினார்; சிவனடியார்களைச் சிவனாகவே கருதி வழிபட்டார்; அடியார்கள் விரும்பியன வெல்லாம் அளித்து வணங்கினார். மெய்ப்பொருளாரது இவ்வியல்பறிந்த முத்தநாதன் ஒரு சிவனடியார்போல் கோலங்கொண்டு கோவலூர் அரண்மனை யெய்தினான். அடியார் என நம்பிய மெய்ப்பொருளார் அவனை வரவேற்று வணங்கினார். தான் அரிதிற் கிடைத்த அருள் நூற் பொருள் விளக்க வந்திருப்பதாக அவன் அறிவித்தான். அவனை மேலிருத்தி, தாம் கீழிருந்து, அருளுரை வழங்க வேண்டினார் மன்னர். அவன் அருள் நூலை எடுப்பவன்போல், மறைத்து வைத்திருந்த கூரிய கொலைக் கருவியை எடுத்து அரசர்மேல் பாய்ச்சி நினைத்ததை முடித்தான். அடுத்து நின்றிருந்த அரசரின் உதவியாளனாகிய தத்தன் என்பான் முத்தநாதன்மேல் பாய முனைந்தான். அரசர் தடுத்து, அடியாரை நகர் எல்லை தாண்டும்வரை காவலுடன் இட்டுச் சென்று நலமுடன் வழியனுப்பி வரும்படி பணித்தார். அவனும் அவ்வாறே செய்தான். அந் நற்செய்தியறிந்து மகிழ்ந்து மன நிறைவுடன் உயிர் நீத்தார் மெய்ப்பொருளார் - இது பெரிய புராண வரலாறு.

நாயனார்

இறைவன் திருவருளே மெய்ப்பொருள் என உணர்ந்து ஒழுகியதால் இவர் மெய்ப்பொருள் வேந்தர் எனப் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில் இவருக்கு இயற்பெயர் ஒன்று இருந்திருக்கவேண்டும். இவர் சிவநெறியிலும்