பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

கெடிலக்கரை நாகரிகம்



அரசர்க்கு அரசராய், அடியார்க்கு அடியாராய்த் திகழ்ந்து கெடிலக்கரை யீன்றளித்த செல்வமாய் விளங்கிய நரசிங்க முனையரையரைப் பற்றி, “இவர் காலம் ஒளவையார் காலம்; தந்தை தெய்வீக அரசன், தாய் பாண்டியன் குமரியாகிய காஞ்சனமாலை” என அபிதான சிந்தாமணியாசிரியர், கூறியிருப்பது ஆராயற்பாவது. மேலும் அந் நூலாசிரியர், ‘சுந்தரரை எடுத்து வளர்த்த நரசிங்க முனையரையர் வேறு, சிவனடியார்க்குப் பொன் வழங்கிய நரசிங்க முனையரையர் வேறு என்று கூறியிருப்பதும் ஆராயத்தக்கது. மற்றும், ‘நரசிங்கர்’ என்னும் பெயரைக் கொண்டு, இவர் பல்லவ மரபினரா யிருக்கலாம்’ என எவரேனும் கூறினும் வியப்படைவதற்கில்லை.

தெய்வீக மன்னன்

திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு தெய்வீகன் என்னும் மன்னன் நடுநாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டை முன்னொரு காலம் ஆண்டதாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது. ஒளவையார் பாரி மகளிரை இந்தத் தெய்வீக மன்னனுக்கு மணம் செய்வித்ததாகவும், இம்மன்னன் வழியில் வந்தவர்களே மலையமான் மரபினர் என்பதாகவும் பல்வேறு செய்திகள் இவனைப் பற்றிக் கூறப்படுகின்றன. இவனைப்பற்றி அறியச் சங்கநூற் சான்று ஒன்றும் இலது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு இவனைப் பற்றிய செய்திகள் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ‘தெய்வீக மகாராஜன்’ என்னும் பெயரில் இவனைப் பற்றி அபிதான சிந்தாமணி ஆசிரியர் எழுதியுள்ள செய்திகள் அதில் உள்ளபடியே வருமாறு:

தெய்வீக மகாராஜன்

இவன் நடுநாட்டை ஆண்ட அரசருள் ஒருவன். இவன் கல்யாணத்தில் ஒளவை சென்று, பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு இம் மூன்றினையும் முறையே பால், நெய், வெண்ணெயாக வரும்படி ஏவினள். ஆதலால் அவ்வாறு வந்தன வென்பர். சிவமூர்த்தி தனித்து இருக்கையில் பர்வதராஜன் காணச்சென்று சாபம் அடைந்து குகமுனிவர் யாகத்தில் பிறந்து தெய்வீக அரசன் என்று பெயர் பெற்றனன். இவன் தெய்வப் புரவி ஊர்ந்து காசி, சிதம்பரம், இராமேச்சுரத்தை நாள் தோறும் தெரிசித்து வருவன். இவனிடமுள்ள குதிரையைப் பிடுங்க ஆவல் கொண்ட தமிழ் நாட்டரசர் மூவரும் மந்திரியரை ஏவிக் குதிரையைக் கேட்டு அனுப்பினர். அரசன் மறுத்தமையால் மூவரசரும் யுத்த சந்நத்தராய் நாங்கள் தோற்பின் எங்கள்