பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

165


வரிசையில், முதல் முதலாக அறியக் கிடைத்திருப்பவர்கள் திலகவதியாரும் திருநாவுக்கரசருமே. இவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள்.

திலகவதியார்

கெடிலத்தின் வட கரையிலே உள்ள திருவாமூர் என்னும் ஊரில் புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் தோன்றியவர் திலகவதியார். இவர்க்கு மருள் நீக்கியார் என்னும் தம்பி யொருவர் இருந்தார். திலகவதியார் மணப் பருவம் எய்தியதும், கலிப்பகையார் என்னும் படைவீரருக்கு இவரை மணம் பேசி முடிவு செய்திருந்தனர். திருமணம் நடைபெறுவதற்குமுன் போர் மூண்டதால், கலிப்பகையார் தம் மன்னனது படையொடு போந்து பகைவரோடு நெடுநாள் போர்புரிந்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தீயூழாகப் புகழனாரும் மாதினியாரும் ஒருவர் பின் ஒருவராக உயிர் துறந்தனர். கலிப்பகையாரும் போரில் மாண்டுபோனார். திருமணம் ஆகாவிடினும் மணம் பேசி முடிவு செய்த கலிப்பகையாரைத் தம் கணவராகத் திலகவதியார் முன்னமேயே உள்ளத்தில் வரித்துக்கொண்டிருந்ததால், இப்போது அவர் இறந்ததும் அம்மையார் செய்வதறியாது திகைத்தார். கணவரையிழந்த அவர் தாமும் உயிர்துறக்கத் துணிந்தார். அப்போது தம்பி மருள்நீக்கியார் தமக்கை திலகவதியார் இறந்தால் தாமும் இறந்துவிடப் போவதாகக் கூறினார். பின்னர்த் திலகவதியார் தமது முடிவை மாற்றிக்கொண்டு தம்பிக்காக உயிர்வாழத் தொடங்கினார், கைம்மைக் கோலம்பூண்டு, திருவதிகை போந்து திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து வரலாயினார்.

பூந்தோட்டம் வளர்த்தல், சிவபெருமானுக்குப் பூத்தொடுத்து அளித்தல், திருக்கோயில் அலகிடல், மெழுகிடல், புல் பூண்டுகளைதல் முதலிய திருப்பணிகளைத் திலகவதியார் புரிந்து வருகையில், தம்பி மருள் நீக்கியாரின் உள்ளத்தைச் சமண சமயம் கவர்ந்தது. அவர் தமது சைவ சமயத்தையும் தமக்கையாரையும் ஒருசேரத் துறந்து சமண சமயத்தில் சேர்ந்து பாடலி புத்திரம் என்னும் நகர்புக்குச் சமணத் தலைவராய் விளங்கினார். தருமசேனர் என்னும் தலைமைப் பட்டத்துடன் அங்கு வாழ்ந்துவந்த போது அவருக்கு வயிற்றில் சூலை நோய் கண்டது. சமணர்கள் எத்தனையோ மருத்துவங்கள் செய்து பார்த்தனர்; மருள் நீக்கியாரின் வயிற்று வலி தீர்ந்தபாடில்லை.

வலி பொறுக்க முடியாத மருள் நீக்கியார் சமணர்க்குத் தெரியாமல் தமக்கை திலகவதியாருக்குத் தமது நிலையைச்