பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

169


அப்பர் காலம்

அப்பர் பெருமானின் காலத்தை அறுதியிட்டுக் கூறத் திட்டவட்டமான சான்று எதுவுமில்லை. அவரது காலத்தைச் சுற்றி வளைத்துத்தான் சொல்ல முடியும். அவரது தேவாரத்திலோ, அவர் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்திலோ, அவர் காலத்தில் ஆண்ட பல்லவ மன்னன் இன்னான் என்று குறிப்பிடப்படவில்லை. பல்லவன் எனப் பொதுப்படையாகவே பெரியபுராணம் கூறுகிறது. அந்தப் பல்வன் மகேந்திரவர்மப் பல்லவனாகத்தான் இருக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றனர். அப்பரது முயற்சியால் பல்லவ மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறினதும், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக்கோயிலை இடித்துக் கொண்டுவந்து, திருவதிகையில் ‘குணபரேச்சரம்’ என்னும் பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. [1]

“வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண்கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்

கூடஇடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான்"

என்பது பெரியபுராணப் பாடல். பாடலிலுள்ள ‘குண்பர வீச்சரம்’ என்னும் கோயில் பெயர்தான் இங்கே உயிர்நாடி இது, குணபரேச்சரம், குணபரேசுரம், குணதரேச்சுரம் என்றெல்லாங் கூட அழைக்கப்படுகிறது. ஈச்சரம் அல்லது ஈசுரம் என்றால், ஈசுவரன் (சிவன்) எழுந்தருளியுள்ள இடம் (கோயில்) என்று பொருளாம். குணபர ஈச்சரம் என்றால், குணபரன் என்பவனால் கட்டப்பட்ட கோயில் என்று பொருளாம். தஞ்சையில், முதலாம் இராசராச சோழ மன்னனால் கட்டப்பட்ட கோயில் ‘இராச ராசேச்சுரம்’ என அழைக்கப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, ஈண்டு, குணபரன் என்னும் பெயர் கோயில் கட்டிய பல்லவ மன்னனைக் குறிக்கின்றது என்பது தெளிவு. இந்தப் பெயர் எந்தப் பல்லவ மன்னனுடையது?

காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பெரும் புகழுடன் அரசாண்ட மகேந்திரவர்ம பல்லவனுக்குக் குணபரன் என்னும் பெயர் ஒன்று வழங்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டுக்களி லிருந்துதெரிகிறது. செங்கற்பட்டு சில்லா வல்லத்திலிருக்கும் குகைக்கோயில் கல்வெட்டில் மகேந்திரவர்மனைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு சிறு பகுதி வருமாறு:


  1. *பெரியபுராணம் - திருநாவுக்கரசர் - 146.