பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

171


மகேந்திர மன்னனது ஆட்சிக் காலத்துக்கு முன்னும் இருந்திருக்கவேண்டும்; பின்னும் இருந்திருக்கவேண்டும். எனவே, அவர் ஆறாம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வாழ்ந்திருக்க வேண்டும்.

அப்பர் கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்து கெடிலக் கரையில் கல்வி - கலைகளைக் கற்று, கெடிலக்கரையில் திருநாவுக்கரசராக உருவானவர்; அவரால் கெடிலக்கரை பெற்ற பெருமை மிகுதி. எனவேதான் இந்நூலில், அப்பரின் கால ஆராய்ச்சி இன்றியமையாததாயிற்று.

அப்பர் பிறந்த மனை

திருவாமூரில் அப்பர் பிறந்த மனை மிகவும் பொலிவுற்றுத் திகழ்கிறது. இதுதான் அப்பர் பிறந்த மனை என அவ்வூரார்

வாழையடி வாழையாக அறிந்து வைத்து வந்துள்ளனர். அந்த மனை வெள்ளாழர் மனை என ஊர் மக்களால்

வழங்கப்படுகிறது. வெள்ளாழர் என்பது வேளாளர் என்பதன் கொச்சை உருவம். அப்பர் வேளாள மரபைச் சேர்ந்தவராதலின், அவர் பிறந்த மனை வேளாளர் மனை’ என வழங்கப் படுவதில் தக்க பொருத்தம் உள்ளது. இதுதான் அப்பர் பிறந்த மனை என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று அவ்வூராரைக் கேட்டதற்கு, வெள்ளாழர் மனை என்ற பெயரே போதிய ஆதாரமாயிற்றே” என்ற பதில் கிடைத்தது. அந்த மனையில் அப்பர் நினைவாக அவருக்கு அழகிய திருக்கோயில் கட்டப்பட்டு 14-7-1963இல் குட முழுக்கும் நடத்தப்பட்டுள்ளது.