பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

கெடிலக்கரை நாகரிகம்


என்னும் ஊருக்குச் சிறிது தொலைவில் கட்டப்பட்டுள்ள அணையாகும். இது, 1862 - 1863 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. முதலில் கட்டினபோது. இதன் நீளம் 421 அடியளவே பிறகு இது மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது இதன் நீளம் 506 அடியும் 3 அங்குலமுமாகும். அணையின் தென்கரையிலிருந்து கால்வாய் பிரிந்து வாணமா தேவியைச் சார்ந்த பகுதிக்கும் அதன் கீழ்ப்பகுதிக்கும் பாசன வசதியளிக்கிறது. இவ்வணையிலும், கோடைக் காலத்திலும் கண்வாய்களிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருக்கும்.

வழக்குப் பெயர்

வானமாதேவி அணை என்னும் பெயர் இருப்பினும், ‘பல்லாநத்த அணை’ என்னும் பெயராலும் மக்கள் பலர் இதனை அழைக்கின்றனர். அண்மையில் ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் சிற்றுாரும் உள்ளதால், அவ்வூரின் பெயரால் மக்கள் அழைக்கின்றனர். ‘பல்லவராயன் நத்தம்’ என்னும் முழுப்பெயர்தான் மக்கள் வழக்கில் ‘பல்லா நத்தம்’ எனக் கொச்சையாகச் சிதைந்து மருவிவிட்டது. வானமாதேவி, பல்லவராயன் நத்தம் என்னும் ஊர்ப்பெயர்கள், பெரிய வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்துகின்றனவன்றோ? இவ்வூர்களைப் பற்றி, ‘கெடிலக்கரை ஊர்கள்’ என்னும் தலைப்பில் பின்னர்க் காண்போம்.

5. திருவயிந்திரபுரம் அணை

வானமாதேவி அணையைத் தொடர்ந்து கீழ்பால் எட்டு கி.மீ. தொலைவு வந்தால் திருவயிரந்திரபுரம் அணையை அடையலாம். இது கடலூருக்கு மேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊரை யொட்டிக் கட்டப்பட்டுள்ளது. 1835 - 1836 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையின் நீளம் 436 அடி ஆகும். 1903 இல் இது நன்கு வலுப்படுத்தப்பட்டது.

இந்த அணைக்குமேல் ஆற்றின் வலப்பக்கத்தில் கால்வாய் பிரிகிறது. இக்கால்வாய் கடலூரின் தென்பகுதியில் பாய்ந்து அவ்வட்டாரத்தில் உள்ள பல ஊர்களுக்குப் பாசன வசதி அளிக்கிறது. பெரிய கால்வாயிலிருந்து சிறிய கால்வாய்கள் பல பிரிகின்றன. அவற்றிலிருந்து சிறுசிறு கால்வாய்கள் மேலும் பல பிரிகின்றன. ஓர் ஒப்புமையால் விளக்கவேண்டுமானால், நம் உடம்பு முழுவதும் உள்ள குருதிக் குழாய்கள் (இரத்த தாரைகள்) போல, இப்பகுதி முழுவதும் கெடிலத்தின் கால்வாய்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிப் பிணைந்து ஓடிக்