பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

313



இராசாதித்தன் 949ஆம் ஆண்டில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்ணதேவனைத் தக்கோலம் என்னுமிடத்தில் பொருது முறியடித்தான். ஆனால், முறியடித்த அன்றிரவே, இராட்டிரகூட மன்னனின் மைத்துனனாகிய கங்க குலத்துப் பூதுகன் என்னும் பூதராசன், சூழ்ச்சியினால் இராசாதித்தனைக் கொன்று விட்டான். இந்தச் செய்தி [1] கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. இராசாதித்தனுடன் தக்கோலம் வரை போர் புரியச் சென்ற படை மறவர்களும் - தலைவர்களும் மன்னனையிழந்து திரும்பி வருகையில் இராசாதித்தனால் கட்டப்பட்ட திருநாவலூர்க் கோயிலில் இறந்துபோன அவன் பெயரால் பல திருவிளக்குகள் ஏற்றுவதற்கு அறக்கட்டளைகள் ஏற்படுத்திச் சென்றதாகப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தோ! மன்னனையிழந்த மாமறவர்கள் மனம் நெகிழ்ந்துருகி மன்னனது உயிர் நற்பேறு பெறவேண்டுமென அவன் பெயரால் திருவிளக்குகள் ஏற்றியிருப்பதாகத் தெரிகிறதே!

திருநாவலூர்ப் பெரிய கோயிலுக்குள் சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில் வரதராசப் பெருமாள் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கோயிலின் தென்கிழக்கு மூலையில் சுந்தரர் - பரவையார் - சங்கிலியார் ஆகியோர்க்கு ஒரு தனிக்கோயில் உள்ளது. கோயிலிலுள்ள இம்மூவரின் உலோக உருவச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்கே சுந்தரர் பிறந்த நாள் (ஆவணி உத்திரம்) விழாவும், வீடுபேறுற்ற நாள் (ஆடி - சுவாதி) விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கோயிலின் வடபால் சுந்தரர் பிறந்த மனையில் அவரது நினைவுக் குறியாக ஒரு மாளிகை கட்டப்பட்டு வருகிறது. அதன் படத்தைக் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - சுந்தரர்’ என்னும் தலைப்பில் காணலாம்.

திருநாவலூர்க் கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்களும் பலர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. தட்சணாமூர்த்தி இங்கே.நின்ற கோலத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் வட்டம்

கடலூர் வட்டம், தென்னார்க்காடு மாவட்டத்துக் கடலோர வட்டங்கட்கு நட்ட நடுவே உள்ளது. திருக்கோவலூர் வட்டத்திலிருந்து இவ் வட்டத்திற்குள் புகும் கெடிலம், இவ் வட்டத்தின் வடபுறமாகக் கிழக்கு நோக்கி ஒடிக் கடலூருக்கு


  1. *இந்திய சாசனங்கள் தொகுதி 5 - பக்கம் 167 தொகுதி 6 பக்கம் 51 தொகுதி 7 - பக்கம் 195.