பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

317


இங்கே ‘கீழாமூர்’ என்பதைப் பார்க்கும் போது, ‘மேலாமூர்’ ஒன்று உண்டு என்பதும் புலனாகிறது. பொதுவாகத் திருக் கோவலூர் வட்டமும் கடலூர் வட்டமும் திருமுனைப்பாடி நாடு என்று சொல்லப்படும். இவற்றுள், மேற்கே உள்ள திருக்கோவலூர் வட்டத்தில் ஒர் ஆமூர் இருக்கிறது; இது மேலாமூராகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அடுத்துக் கிழக்கேயுள்ள கடலூர் வட்டத்தில் ஒர் ஆமூர் இருக்கிறது; இதுதான் அப்பர் பிறந்த ஆமூர்; இதைக் கீழாமூராகக் கொள்ள வேண்டும். எனவே, திருமுனைப்பாடி நாட்டில் கீழாமூர் உள்ள பகுதி, ‘திருமுனைப்பாடிக் கீழாமூர் நாடு’ என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். இதைச் சேர்ந்தது அப்பர் பிறந்த திருவாமூர் என்பது கல்வெட்டுப் பகுதியால் உய்த்துணரப் படுகிறது. இந்தக் கல்வெட்டு, திருவாமூர்ச் சிவன் கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் தொடங்கித் தெற்குச் சுவர்ப்பக்கம் சென்று முடிவதைக் காணலாம்.

திருத்துறையூர்

திருத்துறையூர், விழுப்புரம் - கூடலூர் புகைவண்டிப் பாதையிலுள்ளது. திருத்துறையூரில் புகைவண்டி நிலையம் இருக்கிறது. ஊருக்கும் நிலையத்திற்கும் 3 கி.மீ. இடை வெளி இருக்கும். பண்ணுருட்டிக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. திருத்துறையூர் பெண்ணையாற்றின் தென்கரைக்குச் சில கி.மீ. தொலைவிலிருப்பினும், கெடிலத்தின் வடகரைக்கு 8 கி.மீ. தொலைவில் இருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இவ்வூர் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்ற பதியாகும். சிவன் பெயர் : பசுபதீசுரர் : அம்மன் பெயர்: பூங்கோதை நாயகி. இங்கே சுந்தரர் இறைவனிடம் தவநெறி வேண்டியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. இரண்டாம் சந்தானாசாரியாரும் சைவசித்தாந்த நூல்களுள் சிறந்ததான சிவஞான சித்தியாரை இயற்றியவரும் ஆகிய அருணந்தி சிவாசாரியார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிந்த ஊர் இது. சிவன் கோயிலுக்குள் அருணந்தி சிவாசாரியாருக்கு ஒரு சிறு கோயில் உண்டு. இங்கும் பல கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் உண்டு.

பண்ணுருட்டி

பண்ணுருட்டி, கடலூருக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவிலும் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் - நெய்வேலிக்கு வடக்கே 26 கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. ஆற்றுக்கும் ஊருக்கும் ஒரு கி.மீ. இடைவெளி இருக்கும். கடலூரிலிருந்து திருக்கோவலூர்ப்