பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

கெடிலக்கரை நாகரிகம்


மூன்று திசைகளிலும் குளமும் வயலும் சூழ்ந்திருத்தலாலும், மேல்திசை வாயிலே பயன்படுத்தப்படுகிறது இக் கோயிலுக்குக் கோபுரம் ஒன்றுமில்லை. கோயிலின் தென்பால் ஒடை போன்ற பெரிய குளம் இருக்கிறது. கோயிலுக்குள் உள்ள கிணற்றில் தண்ணிர் தரை மட்டத்திற்கு உயர்ந்திருக்கிறது (நாங்கள் பார்த்தது: 4-1-1967 மார்கழித் திங்களில்). கோயில் சிறியதாயிருப்பினும் நன்கு அழகுபடுத்தப்பட்டுக் கவர்ச்சியாயிருக்கிறது. கருவறையில் இறைவன் திருமுன்புக்கு நேரே கிழக்குப் புறமாக வாயில் இல்லை; தென்புறமே வாயில் உள்ளது.

திருவாமூர் கோயிலால் சிறப்புப் பெற்றது என்று சொல்வதனினும், திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்ததாலேயே சிறப்புற்றது என்று சொல்வதே பொருந்தும். நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கும் செய்தியினையும் அக் கோயிலின் படத்தையும் அது சார்பான விவரங்களையும் இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - திருநாவுக்கரசர்’ என்னும் தலைப்பில் காணலாம். திருவாமூரில் அப்பர் பிறந்த பங்குனி உரோகிணி நாளிலும் அவர் வீடுபேறுற்ற சித்திரைச் சதய நாளிலும் சிறப்பாக விழாக்கள் நடைபெறுகின்றன. திங்கள்தோறும் வரும் சதயத்திலும் விழா உண்டு. திருமணம் உறுதி செய்த பின்னர்த் திருமணம் நிகழ்வதற்குள்ளாகவே மணமகள் திலகவதியார் மணமகன் கலிப்பகையாரைப் போரில் இழந்துவிட்டதால், அவர் மரபினராகிய வேளாளர்கள், திருமணம் உறுதி செய்த நாளிலேயே திருமணமும் நடத்திவிடுவதைத் திருவாமூர் வட்டாரத்தில் காணலாம்.

திருவாமூர்க் கோயிலில் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள முதற் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடத்தக்கது. அக் கல்வெட்டு முதற் குலோத்துங்க சோழனது 21ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1090) வெட்டப்பட்டது. திருவாமூர் மக்கள் கோயிலில் திருநாவுக்கரசருக்குப் பூசனை தொடர்ந்து நடைபெறுவதற்காக நிலம் விற்றுக் கொடுத்ததைப் பற்றி அக் கல்வெட்டு பேசுகிறது. அதன் இடையேயுள்ள,

"கங்கைகொண்ட சோழவள நாட்டுத் திருமுனைப்

பாடிக்கீழாமூர் நாட்டுத்திருவாமூர் ஊரோம்.’’

என்னும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது. இப் பகுதியால், திருவாமூர் இருக்கும் பேரரசுப் பெருநாட்டின் பெயர் ‘கங்கை கொண்ட சோழவள நாடு’ என்பதும், அதன் உட்பிரிவு ‘திருமுனைப்பாடிக் கீழாமூர் நாடு’ என்பதும் பெறப்படும்.