பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

323


கொள்ளுங்களேன்! ஆனால், பரமேசுரவர்மப் பல்லவன் காலத்தில் கோபுரமின்றி வாயில் மட்டுங்கூட இருந்திருக்கலாம்! இரண்டாம் கோபுரத்தின் காலம் எதுவாயிருப்பினும், முதல் கோபுரம் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், திருவதிகைக் கோயில் மிகவும் பழைமையானது; பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோரின் கல்வெட்டுகள் இதில் உள்ளன; அப்பர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டிலேயே மிகவும் புகழ்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக, கோயில் கருவறைமேல் உள்ள விமானம் பல்லவர் காலத்து வேலைப்பாடு உடையதாகத் தெரிகிறது; ஆதலின், அது பல்லவ மன்னரால் அமைக்கப்பட்டது என்று கொள்ளலாம். இதற்குத் தக்க சான்று உள்ளது. இந்த விமானம் நிருபதுங்கவர்மப் பல்லவ மன்னனது பதினாறாம் ஆட்சியாண்டில் அஃதாவது, கி.பி. 870 ஆம் ஆண்டளவில் - திருத்திப் புதுப்பிக்கப்பட்டதாக, கருவறையின் முன் மண்டப வாயில் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமானத்தின் அடிப்பகுதி கருங்கல்லால் ஆனது. கருங்கல் நிலையின் மேல் விமானம் தேர் போன்ற தோற்றத்தில் செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. விமானத்தைச் சுற்றி அடி தொட்டு முடிவரை சுதையாலான உருவங்கள் செறிந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இத்தகைய சுதை வேலைப் பாட்டை, இதேபோல் பல்லவர் படைப்பாகிய காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலில் கண்டுகளிக்கலாம். இந்த விமானத்தின் மிக அழகிய தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்: