பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

355


ஆதிசேடன் வாலால் அடித்துத் தோண்டியதாகச் சொல்லப்படும் சேஷதீர்த்தம் என்னும் கிணறு திருவயிந்திரபுரம் கீழ்க்கோயிலில் உள்ளது. அந்தக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஆதிசேடன் (பாம்பு) உரு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுத் தண்ணீரின் நிறமும் வாடையும் இயற்கைக்கு மாறாய் உள்ளன - அதாவது, நன்றாயில்லை. காரணம், வேண்டி நேர்ந்து கொண்ட (பிரார்த்தித்துக் கொண்ட) அன்பர்கள் பால், மிளகு, வெல்லம், குடம் முதலியவற்றை அக் கிணற்றில் கொட்டுகின்றனர்; காணிக்கையாகக் காசும் போடுகின்றனர்; இதனால் தண்ணீரின் தன்மை மாறுதலாயுள்ளது. ஆனால், இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான் கோயிலில் உணவுப் பொருட்கள் ஆக்கப்படுகின்றன; இந்தத் தண்ணீரில் ஆக்கப்படுவதால், உணவுப் பொருட்கள் மிகவும் சுவை உடையனவாகவும் நெடுநேரம் கெடாதனவாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வைணவர்களால் ‘நடுநாட்டுத் திருப்பதி’ எனச் சிறப்பித்துக் கூறப்படும் ‘திருவயிந்திரபுரம்’ திருக்கோயில், திருமங்கை யாழ்வாரின் மங்களாசாசனப் பாடல் பெற்றுள்ளது. இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்த மிகச் சிறந்த வைணவ ஆசாரியரான வேதாந்த தேசிகர் இவ்வூர் இறைவன்மேல் தமிழிலும் வடமொழியிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். இவ்வூரைப் பற்றி வடமொழியில் பிரம்மாண்ட புராணம், கந்த புராணம் (சைவக் கந்த புராணம் வேறு), பிருகந் நாரதிய புராணம் முதலிய நூல்கள் உள்ளன. கருட நதியாகிய கெடிலம் கங்கைக்கு ஒப்பானது எனத் திருமாலால் பாராட்டிப் புகழப் பட்டிருப்பதாகக் கந்த புராணம் (வைணவ புராணம்) முதல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலே, மும்மணிக் கோவை, நவரத்தினமாலை முதலிய சிற்றிலக்கியங்களும் இவ்வூரின் மேல் இயற்றப் பட்டுள்ளன. “வெற்புடன் ஒன்றி அயிந்தையில் வெவ்வினை தீர் மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை” என மும்மணிக் கோவையில் அயிந்தை (அயிந்திரபுரம்) பாராட்டப் பெற்றுள்ளது.

திருவயிந்திரபுரத்தில் சித்திரைத் திங்களில் பத்து நாள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் திருவிழா நாளான சித்திரைப் பருவத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அன்று மிகப் பெருந்திரளான மக்கள் இங்கே கூடுவர். எட்டாம் திருவிழா அன்று இரவே ஆயிரக் கணக்கான மக்கள்வந்து கூடி ஆற்று மணலில் படுத்து உறங்கியும் உரையாடியும் இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பர். வைகறையில் எழுந்து