பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

கெடிலக்கரை நாகரிகம்



திருமணம் போன்ற ஒரு நன்னிகழ்ச்சியோ அல்லது வேறு ஒரு புதிய செயலோ தொடங்க வேண்டுமெனில் குறி கேட்டே தொடங்குவர். கூடுமா கூடாதா என அறிவதற்காக இறையுருவத்தின் முன்னிலையில் திருநீறும் குங்குமமும் தனித்தனியே மடித்துப் போட்டுச் சிறு குழந்தையை விட்டு எடுக்கச் செல்வர்; சிலர் கைவிரல்கள் இரண்டினைக் காட்டி, ஏதேனும் ஒன்றைத் தொடுமாறு குழந்தையைத் தூண்டுவர். சிலர் கோயிலுக்குச் சென்று பூசாரியிடம் - சாமியாடியிடம் - குறி கேட்பர். அம்மன்மேல் பூக்களை நிரப்பி, மேலே ஒர் எலுமிச்சம் பழத்தை வைத்துப் பூசாரி உடுக்கையடித்துப் பாட்டுப் பாடி வன்னிப்பார்; குறி கேட்கும் குடும்பத்து மகளிர் ஒருவர் முன்றானைத் துணியைக் கீழே ஏந்திக் கொண்டிருப்பார்; பழம் அத்துணியில் விழுந்தால் திருமணம் செய்யலாம்; கீழே விழின் செய்யக்கூடாது. இப்படியொரு நம்பிக்கை சில இனத்தாரிடம் - சில குடும்பத்தாரிடம் உள்ளது. எலுமிச்சம் பழம் துணியில் விழாததால் ஒரு சிலர்க்குத் திருமணம் பல ஆண்டுகள் தள்ளிப் போனதும் உள்டு.

நகர்ப் புறங்களில் அண்டை வீட்டினரும் எதிர்வீட்டினரும் அயலார்போர் வாழினும் (இங்கேயும் எல்லாரும் இப்படியில்லை) - சிற்றூர்களில் மதம் - இனம் - மொழி போன்ற வேறுபாடுகள் இன்றி ஒரு குடும்பத்தினர் போல் மக்கள் ஒன்றி வாழ்கின்றனர். ஒருவர் வீட்டிற்குள் இன்னொருவர் கேட்காமலேயே நுழைந்து தெருவிலிருந்து தோட்டம் வரையும் எங்கு வேண்டுமானாலும் தங்கு தடையின்றிப் போய்வருவார்; உண்ணும்போதும் உண்ணும் இடத்திற்குள் கூசாது நுழைவார். இது நாகரிகக் குறைவு அன்று; உயர்வு தாழ்வு இன்றி ஒற்றுமையுடன் பழகும் உயர்ந்த நாகரிகப் பண்பாகும் இது.

ஊருக்குள் அரசாங்கத்தின் தொடர்பு இல்லாமலேயே மக்களுக்குள் ஊராட்சி ஒன்று நடைபெறும். இதன் தலைவர் நாட்டாண்மைக்காரர் அல்லது பெரிய தனக்காரர் எனப்படுவார். நாட்டாண்மைக்காரர் அப்போதைக் கப்போது மக்களால் பேர்ட்டியின்றி ஒருமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்குத் துணையாக உறுப்பினர் சிலர் இருப்பர். எப்பேர்ப்பட்ட வம்பு வழக்குகளும் நீதிமன்றம் செல்லாமலேயே ஊராரால் தீர்த்து வைக்கப்படுவதுண்டு. சாவு - வாழ்வு தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் நாட்டாண்மைக்காரர் வருவார். அவர் வந்த பிறகே அவர் கையால் நிகழ்ச்சி தொடங்கப்பெறும். ஊராரின் ஒப்புதலுடனேயே எந்தச் செயலும் நடைபெறும். ஊராரை மீறி நடப்பவர் ஊராரால்