பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கெடிலக்கரை நாகரிகம்


கூன் முதுகான - முதுகு கூனிய என்பது போலப் பொருள். இந்தப் பொருளுக்கும் ஆற்றுக்கும் தொடர்பில்லையாதலின் இந்தச் சொல்லை ஆராய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடலாம். ஒரு வேளை, ஆற்றின் வளைவைக் குறிப்பதாக ஏதேனும் தொடர்பு கூறுவதாயின், எல்லா ஆறுகளுக்குந்தான் வளைவு இருக்கிறது எனக் கூறித் தள்ளிவிடலாம்.

3. மூன்றாவதாக, gaddalika (கடலிகா) என்னும் சொல்லுக்கு, ‘கடலிகா’ என்னும் ஆற்றின் போக்கைப்போல் மிகவும் மெதுவாகச் செல்லும் நீரோட்டம் {Pravahena- like the current of the gaddalika river, very slowly) என்பதாகப் பொருள் செய்யப்பட்டுள்ளது. கடலிகா என்பது நமது கெடிலம் ஆற்றைக் குறிக்கும் பெயர் அன்று; அது எங்கேயோ உள்ள ஏதோ ஓர் ஆற்றைக் குறிப்பிடுகிறது. இதனை அடுத்த சொல் விளக்கத்தாலும் உறுதி செய்து கொள்ளலாம்.

4. இறுதியாக, gaddarika (கடரிகா) என்னும் சொல்லுக்கு, ‘கடரிகா என்பது மிகவும் மெதுவாகச் செல்லும் ஓர் ஆற்றின் பெயர், இந்த ஆறு எங்கே தோன்றி எங்கே ஓடுகிறது எனத் தோற்றமும் போக்கும் இப்போது தெரியப்படவில்லை’ (N, of a river with a very slow current of which the source and course are unknown) என்பதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து, கடரிகா, கடலிகா என்னும் இரண்டு சொற்களுமே ஏதோ ஓர் ஆற்றைக் குறிப்பன என்பதும், இந்த ஆறு இருக்குமிடம் தெரியவில்லை - வடமொழி நூற்களிலே பெயர் மட்டும் காணப்படுகிறது என்பதும் புலனாகலாம். ஆகவே, வடமொழி நூலிலே பெயர் காணப்படும் கடலிகா அல்லது கடரிகா என்னும் ஆறு, வடநாட்டுப் பக்கத்தில் உள்ள ஏதோ ஓர் ஆறாக இருக்கக்கூடுமே தவிர, தென்னாட்டில் உள்ள கெடிலமாகக் கருத வாய்ப்பே இல்லை. அன்றியும், தென்னாட்டில் எத்தனையோ பெரிய பெரிய ஆறுகள் இருக்க, சிறிய கெடிலத்தைப் பற்றிப் பழைய வடநூற்கள் குறிப்பிடக் காரணமேயில்லை.

மற்றும், கடா (gada), கடலிகா (gaddalika) என்பன போன்ற வடமொழிச் சொற்களின் அடிப்படையில் தமிழ் நாட்டு ஆற்றைக் குறிக்கும் கெடிலம் என்னும் சொல் உருவாகியிருக்க முடியும் என்ற கருத்துக்கு மொழி வரலாற்றுக் கொள்கையும் இடம் தராது. கெடிலக் கரையில் கல்மரத் துண்டுகள் காணப்பட்டதைக் கொண்டும், கெடிலம் கடலோடு