பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலம் - பெயரும் காரணமும்

85


கலக்குமிடத்தில் கழிமுகத் தீவுகள் ஏற்பட்டிருப்பதைக் கொண்டும் கெடிலம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும் என (அடுத்த பகுதியில்) ஆய்ந்து முடிவு கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு பழமையான ஆற்றின் பெயராகிய கெடிலம் என்பது, ஈராயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ் நாட்டிற்கு வந்த வடமொழிச் சொல்லாக இருக்கவே முடியாது.

பிற்காலத்தில் தமிழ் நாட்டில் பல இடங்களின் பெயர்கள் வடமொழிச் சொற்களால் குறிக்கப்படுவதைப் போல, இந்த ஆற்றிற்குக் கெடிலம் என்னும் வடமொழிப் பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கூறலாம். அப்படியென்றால் இந்த ஆற்றின் பழைய பெயர் எது? பன்னுறாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழ்நாட்டில் தோன்றித் தமிழ்நாட்டில் ஓடித் தமிழ்நாட்டுக் கடலில் கலக்கும் ஓர் ஆற்றுக்குத் தமிழில்தானே முதலில் பெயர் வைக்கப்பட்டிருக்கக் கூடும்? அந்தத் தமிழ்ப் பெயர் எது? திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஓர் ஆற்றைத் ‘தாமிரவருணி’ என்னும் வடமொழிப் பெயரால் இப்போது குறித்தாலும், ‘பொருநை’ என்னும் பழைய தமிழ்ப் பெயர் அதற்கு உள்ளமையை இலக்கியங்களால் அறிகிறோம். அதுபோல, கெடிலம் என்பது வடமொழிப் பெயராயின் பழைய தமிழ்ப்பெயர் எங்கே? அப்படி யொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த அப்பர் தேவாரத்திலும் கெடிலம் என்ற பெயரே காணப்படுகிறது. பிற்காலத்தில் ‘கருடநதி’ என்ற ஒரு பெயர் ஏற்பட்டது. அது, திருவயிந்திரபுரப் பதிப்பெருமை தொடர்பாக ஏற்பட்டது. திருமாலின் தண்ணீர் வேட்கையைத் தணிப்பதற்காகக் கருடன் தன் அலகால் கீறி உண்டாக்கிய ஆறு ஆதலின் ‘கருடநதி’ என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுவது ஒரு வகைப் புராணக் கதை. இது குறித்துப் பின்னர் விவரிக்கப்படும். இந்தப் பெயர் மிகவும் பிற்காலத்தில் ஏற்பட்டது. மிகப் பழைய பெயர் கெடிலம் என்பதே. எனவே, அது தமிழ்ப் பெயரேதான்; வடமொழிச் சொல்லிலிருந்து உருவான பெயர் அன்று.

கெடிலம் என்பது வடமொழிச் சொல் அன்று என்று கூறுவது, ‘எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை’ என்று கூறுவதுபோல் இருக்கிறதே! என்று சிலர் சொல்லலாம். இங்கே இது குறித்து இவ்வளவு எழுதவேண்டி வந்ததற்குக் காரணம், ஆங்கில அறிஞர் வின்சுலோ அவர்களின் அகராதிப் பொருள்