பக்கம்:கேரக்டர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

"மெட்ராஸுக்கு எதுக்கு வந்தே?"

"வைத்தியம் செஞ்சுக்கத்தான்."

"உன்னோடு எத்தனை பேரு வந்திருக்காங்க?"

"இரண்டு பேரு!"

"எங்கே தங்கியிருக்கீங்க?"

"ஓட்டல்லே."

"ஏன்யா, ரயிலுக்கும் ஓட்டலுக்கும் பணத்தைச் செலவழிச்சுக்கிட்டு வந்தவருக்கு டாக்ஸிக்கு வெயிட்டிங்கிலே ஒரு நாலணாக் கூட ஆயிட்டா குடியா முழுகிடும்? உனக்கு முன்னாலே வந்தவங்களையெல்லாம் கவனிச்சப்புறந்தான் உன்னைக் கவனிப்பேன். அவசரமாக இருந்தா எழுந்து போகலாம்."

"ஐயா, ஐயா, ஒரு மாசமா வயிற்றுவலி தாங்காமல் துடிக்கின்றேன்யா."

"இந்தச் சூரணத்தைத் தேனிலே குழைச்சு மூணு நாளைக்குச் சாப்பிடு. சரியாப் போயிடும்."

"ஆகாரம் என்னங்க சாப்பிடலாம்?"

"மசாலா தோசையும், மலபார் அடையும் சாப்பிடு. ஆளைப்பாரு ஆளை! வயிற்று வலின்னுட்டு ஆகாரம் என்ன சாப்பிடலாமாம்? ஒரு மாசத்துக்குச் சாப்பாட்டையே தொடக்கூடாது. தெரியுமா? ரவையும், சர்க்கரையும் சேர்த்துக் கஞ்சி பண்ணிச் சாப்பிடணும். ரவையும் சர்க்கரையும் சேர்த்து லட்டா செஞ்சு சாப்பிட்டா என்னான்னு கேட்கக் கூடாது. ஊம்...உமக்கு என்ன?"

"அடிக்கடி மயக்கமா வருது."

"உத்தியோகம் எங்கே?"

"ரயில்வேயிலே இருக்கேன்."

"ரெயில்வேலே இருக்கேன்னா போறாது. போர்ட்டர்கூட ரெயில்வேலேதான் இருக்கான். என்ன. வேலைங்கறதைச் சொல்லணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/118&oldid=1481156" இலிருந்து மீள்விக்கப்பட்டது