பக்கம்:கேரக்டர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



119

" ஹெட் கிளார்க்!"

"அப்படிச் சொல்லுமே; சம்பளம்?"

"நூற்றெண்பது ரூபாய்."

"பிடிப்பு உண்டா?"

"இடுப்பண்டை அடிக்கடி பிடிச்சுக்குது."

"ஓய், அதைக் கேட்கலை. சம்பளத்திலே பிடிப்பு உண்டான்னு கேட்டேன்."

"உண்டு, உண்டு; பிடிப்பெல்லாம் போக கைக்கு நூற்றைம்பதுதான் வருது!"

"ஊம்; இதிலே மூணு வேளை மருந்து இருக்குது; நாலு மணிக்கொரு தடவை சாப்பிடணும். அப்புறம் ஒரு மண்டலம் நவரக்கிழி சிகிச்சை செய்துக்கணும். நூறுரூபாய் செலவாகும் அதுக்குத்தான் உம் வேலையைப்பற்றி விசாரிச்சேன்."

"சரிங்க, இந்த மூணு அவுன்ஸை எத்தனை நாளைக்குச் சாப்பிடறது?"

"நாலு மணிக்கு ஓர் அவுன்ஸ்வீதம் மூணு வேளை சாப்பிட்டால், இந்தப் புட்டியிலே இருக்கிற மருந்து ஒரு நாளைக்குத்தான் காணும். இந்தச் சின்னக் கணக்குக்கூடத் தெரியறதில்லே. நான் சொல்றப்பவும் கவனிக்கிறதில்லே.ஊம் அடுத்த கேஸ் யாரு?..."

"சவனப்பிராஸம் அரைபாட்டில் வேணுங்க!"

"இப்படி எழுந்து வந்து, என்னுடைய நாற்காலியிலே உட்கார்ந்துகொள்ளும். என்னய்யா முழிக்கிறீர்? ஏன்யா வைத்தியர் நானா? நீரா? உம் வியாதி என்னங்கறதைச் சொல்லும். மருந்து என்ன என்பதை நான் சொல்கிறேன் சவனப் பிராஸம் வேணுமாம், சவனப்பிராஸம்!"

வைத்தியர் வேதாசலம் நோயாளிகளிடம் என்னதான் சீறிப் பாய்ந்தாலும் எவ்வளவுதான் எரிந்து விழுந்தாலும் எல்லோரும் அவரைத்தான் தேடி வருவார்கள். என்ன செய்யலாம்? வைத்தியருக்கு வாய் பொல்லாதுதான். ஆனால் கை ராசிக்காரராயிருக்கிறாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/119&oldid=1481157" இலிருந்து மீள்விக்கப்பட்டது