பக்கம்:கேரக்டர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



134

சாமியார் 'தண்ணீர்ப் பந்தல்' போட்டுவிடுவார். பந்தலுக்கு முன்னால் 'அநுமார் தர்ம கைங்கரியம்' என்று எழுதியிருக்கும்.

ஒரு சிறு தென்னங்கீற்றுப் பந்தல், அதற்குள்ளே நீர் மோர், பானகம் இரண்டையும் பானைகளில் நிரப்பி வைத்துக் கொண்டு, ஏழை எளியோருக்கு வழங்குவார்.

தர்ம கைங்கரியத்துக்கு வேண்டிய பொருளுக்கும் பணத்துக்கும் அவர் யாரையும் தேடிச் செல்லமாட்டார். அவ்வளவும் அவரைத் தேடியே வரும்.

பைக்குள் செப்பு அநுமார் கவசங்கள் நிறைய வைத்திருப்பார். சிறு குழந்தைகளைக் கண்டால் அந்தக் கவசத்தில் ஒன்றை எடுத்து அரைஞாணில் கட்டிவிடுவார்.

அந்த நேரங்களில் குழந்தைகள் அவரைப் பூச்சாண்டி என நினைத்து அலறும்.

"அப்பனே, ஆண்டவா, அழாதே" என்று அன்போடு கூறுவார் சாமியார்.

கோயில்களில் கிடைக்கும் பிரசாதந்தான் அவருக்கு ஆகாரம்.

ஊருக்கு ஓர் அநுமார் கோயில் கட்டிவிடவேண்டுமென்பது அவர் ஆசை.

சாமியார், அநுமார் சித்திரம் போட்டுக்கொண்டிருக்கும் போது சாலை வழியே போகும் படித்த அறிவாளிகளில் சிலர், "இது ஒரு மாதிரிப் பைத்தியம். எந்தச் சுவரைக் கண்டாலும் அநுமார் படம் எழுதிக்கொண்டிருக்கும்" என்பார்கள். அவர்களிலேயே வேறு சிலர், “கண்ட கண்ட ஆபாச வார்த்தைகளை எழுதிச் சுவர்களைப் பாழாக்கும் பைத்தியங்களைக் காட்டிலும் இந்தப் பைத்தியம் எவ்வளவோமேல்" என்று அதற்குப் பதில் கூறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/134&oldid=1481174" இலிருந்து மீள்விக்கப்பட்டது