பக்கம்:கேரக்டர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சர்வர் சந்தானம்


சினிமாக் கொட்டகையில் 'இண்டர்வெல்' நேரம். திடீரென்று பெஞ்சு வகுப்பிலிருந்து ஒரு சீட்டிச் சத்தம் கேட்டது. ஒரு 'பரட்டைத்தலை' பெஞ்சு மேல் நின்று கொண்டு 'பால்கனி' பக்கமாகத் திரும்பி, "டேய்! அதோ பாருடா, சினிமா ஸ்டார் மிஸ் சந்திரா ராணி..." என்றான். உடனே, பத்துப் பதினைந்து பேர் மள மள வென்று பெஞ்சு மீது ஏறி நின்று சீட்டியடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அத்தனை கும்பலில், அந்த அரை வெளிச்சத்தில் சினிமா ஸ்டார் சந்திரா ராணியைக் கண்டுபிடித்தது வேறு யாருமில்லை; சர்வர் சந்தானந்தான்! ஓட்டலில் வேலை செய்வது தன்னுடைய தலைவிதி என்றும், தனக்கிருக்கும் 'பர்சனாலிடி'க்கும், திறமைக்கும் தான் சினிமா வானில் மின்னிக் கொண்டிருக்கவேண்டிய ஒரு பெரிய 'ஸ்டார்' என்றும் அவன் எண்ணிக் கொண்டிருந்தான். "நான் பிறந்த நட்சத்திரம் சரியில்லை; அதனால் நான் ஒரு ஸ்டார் ஆகாமல் இங்கே காப்பி ஆற்றிக்கொண்டிருக்கிறேன்!” என்று எல்லோரிடமும் சொல்லுவான்.

அவன் ஆஸ்தியெல்லாம் ஒரு டிரங்குப் பெட்டிதான்; அந்தப் பெட்டிக்குள் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, சோப்பு. ஷேவிங் செட், பவுடர் டப்பா, சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் இவ்வளவும் இடம் பெற்றிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/15&oldid=1478760" இலிருந்து மீள்விக்கப்பட்டது