பக்கம்:கேரக்டர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

"வாழ்க்கையிலே ஒருதடவையாவது ஒரு படத்திலேயாவது நடிக்கணும்னு ஆசையாயிருக்கு, சார்! இதைப் பார்த்தீங்களா? இத்தனை போஸும் என்னுடையதுதான்..." என்று கூறித் தன் மணிபர்ஸிலுள்ள புகைப் படங்களை எடுத்து அவரிடம் காட்டினான்.

"அப்புறம் இன்னொரு விஷயங்க... ஷூட்டிங்கே பார்த்ததில்லே நான். ஒரு நாள் ஏற்பாடு பண்றீங்களா?" என்றான் தலையைச் சொறிந்துகொண்டே. எல்லோரையும் போல அவரும் புன்சிரிப்புச் சிரித்தபடியே, "ஆகட்டும், கவனிக்கிறேன்!" என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

சுருட்டை மயிர் இருந்தால் சினிமாவில் சேருவது சுலபம் என்று நினைத்திருந்த அவனுக்கு ஒரு சான்ஸ்கூடக் கிடைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு கிராப்பை வேறுவிதமாக வாரிப் பார்த்தான். நாசூக்காக மீசை வைத்துப் பார்த்தான். குங்குமப் பொட்டைச் சிறிதாக்கினான்.

அப்புறந்தான் அவனுக்கு ஒரு ஸ்டூடியோவில் வேலை கிடைத்தது. ஸ்டூடியோ காண்டீனில் சர்வர் வேலைதான். ஆனால், அதற்காக அவன் வருத்தப்படவில்லை. தினமும் ஸ்டூடியோவுக்கு வரும் ஸ்டார்களை நேரில் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/19&oldid=1478764" இலிருந்து மீள்விக்கப்பட்டது