பக்கம்:கேரக்டர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

பையன்களும் உற்சாகமாக ஓடிப் போய் வந்துகொண்டிருப்பார்கள். காரணம், ஐஸ் க்ரீம் வாங்கிச் சாப்பிட அவர்களுக்குக் காசு கிடைக்கும்!

சீட்டாட்டத்தில் அப்பாவின் லாப நஷ்டங்களை யெல்லாம் குழந்தைகள் அவ்வப்போது கவனித்து அம்மாவுக்கு அஞ்சல் செய்துகொண்டிருப்பார்கள்.

'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்ற கீதை வாக்கியத்தைக் காரியத்தில் கடைப்பிடிப்பவர் முத்தண்ணா. சீட்டாட வேண்டியது அவருடைய கடமை. பலனைப்பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆட ஆடப் பணம் போய்க்கொண்டேயிருக்கும் அவருக்கு. ஆனால் எவ்வளவு பணம் போனாலும் சளைக்கமாட்டார் அவர்.

ரம்மியில் விட்டதை மூணு சீட்டில் பிடிக்கப் பார்ப்பார். மூணு சீட்டில் விட்டதை ரம்மியில் பிடிக்கப் பார்ப்பார். சீட்டாட்டத்தின்போது அவருக்குள்ள கவலையெல்லாம் கையிலுள்ள பணம் தீர்ந்து போய்விட்டால் அடுத்தாற் போல் சீட்டாடுவதற்கு என்ன செய்வது என்பதுதான்.

சீட்டாட்டத்தில் நேர்மையையும் ஒழுங்கையும் கடைப்பிடிப்பவர் அவர். ஒரு சமயம் அவரும் எதிர் வீட்டு நண்பரும் மட்டும் உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர். எதிர் வீட்டு நண்பர் ஆட்டத்துக்கு இடையில் சற்று அவசரமாக எழுந்து வீட்டுக்குப் போனார். அவர் திரும்பி வரும்வரை சும்மா இருக்கப் பிடிக்காத முத்தண்ணா நண்பரின் சீட்டையும் தாமே எடுத்து ஆடிக்கொண்டிருந்தார். எதிர் வீட்டுக்காரர் திரும்பி வந்ததும், "இந்தாங்க சார், உங்க ஆட்டத்தையும் நானே ஆடினேன். அதில் எனக்கு இரண்டரை ரூபாய் நஷ்டம். உமக்கு இரண்டரை ரூபாய் லாபம்" என்று சொல்லிக் காசை எண்ணிக் கொடுத்தார்.

முத்தண்ணாவிடம் இன்னொரு நல்ல குணமும் உண்டு.

கே.—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/33&oldid=1478903" இலிருந்து மீள்விக்கப்பட்டது