பக்கம்:கேரக்டர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


“சார், நாற்பது ரூபா இருந்தா கொடுங்க நாளைக்குச் சாயந்தரம் ஆறு மணிக்கெல்லாம் திருப்பிக் கொடுத்துடறேன்” என்று தெரிந்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு போவார். ஆட்டத்தில் நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் மறுநாள் மாலை ஆறு மணிக்குத் தலையை ‘அடகு’வைத்தாவது கடனைத் திருப்பிக் கொண்டு போய்க் கொடுத்து விடுவார்.

சம்பாதிப்பதையெல்லாம் சீட்டில் தொலைப்பதே முத்தண்ணாவின் வழக்கமாகிவிடவே, அவருடைய நண்பர்கள் பலர் அவரோடு சீட்டாடுவதையே நிறுத்திக்கொண்டார்கள். “முத்தண்ணா! உமக்கு வயசாச்சு; உம்முடைய பெண் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிறாள். அதைப்பற்றி உமக்குக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா? இந்த வழக்கத்தையே இனி விட்டுவிடவேண்டும். எப்போதாவது கலியாணம் போன்ற விசேஷ நாட்களில்மட்டும் ஆடுங்கள். போதும்” என்று அவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டனர். சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட முத்தண்ணா சரி என்று ஒப்புக் கொண்டார்.

அவ்வளவுதான். வெகு சீக்கிரத்திலேயே அவர் தம் பெண்ணுக்கு ஒரு வரனைப் பார்த்துக் கலியாணத்திற்கு நிச்சயம் செய்துவிட்டார். “எல்லோரும் முத்தண்ணாவுக்குப் புத்தி வந்துவிட்டது” என்று சொல்லிச் சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் முத்தண்ணா தம் மகளின் திருமணத்தை அவ்வளவு சீக்கிரம் முடித்தது எதற்குத் தெரியுமா? இனிமேல் நிம்மதியாய்ச் சீட்டாடிக்கொண்டிருக்கலாம் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/34&oldid=1478911" இலிருந்து மீள்விக்கப்பட்டது