பக்கம்:கேரக்டர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



'புள்ளி' சுப்புடு


ஆந்திரா நெய் வியாபாரியைப்போல் சட்டைப்பையில் திணிக்கப்பட்ட ஒரு சிறு கணக்கு நோட்டுப் புத்தகம், அத்துடன் இரண்டு பவுண்டன் பேனாக்கள், ஒன்றில் சிவப்பு மசி, இன்னொன்றில் நீல மசி. தெரிந்தவர்களுடைய டெலிபோன் நம்பர்கள். விலாசங்கள்-இன்னும் என்னென்னவோ புள்ளி விவரங்களெல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் அடங்கியிருக்கும்.

அந்தக் கணக்கு நோட்டுக்குரியவர் யார் தெரியுமா? சர்க்கார் ஸ்டாடிஸ்டிகல் டிபார்ட்மெண்டில், கடந்த முப்பது வருட காலம் உத்தியோகம் பார்த்து ரிடையராகியுள்ள திருவாளர் 'புள்ளி' சுப்புடுதான்.

புள்ளி சுப்புடு தெருவில் நடக்கும்போது சும்மாப் போக மாட்டார். ஏதாவது ஒரு கணக்கை விரல் விட்டு எண்ணிக் கொண்டேதான் போவார்!

சுபாஷ் போஸ் மாயமாக மறைந்த தேதி, வைஸ்ராய் வேவலின் சிராத்த தினம், நைல் நதியின் நீளம், இமயமலையின் உயரம்; பரங்கிமலையின் சுற்றளவு; குதிரைப் பந்தயத்தில் டிரிபிள் ஈவெண்டில் முதலாவதாக வந்த குதிரைகளின் நாமதேயங்கள்; அஸ்வான் அணைக்கட்டுக்கு ஆகும் செலவு: முதன்முதலாக வெளிவந்த தமிழ் டாக்கியின் நீளம், கோட்டைக்கு அருகில் ஜப்பான்காரன் குண்டு போட்ட தேதி—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/5&oldid=1478051" இலிருந்து மீள்விக்கப்பட்டது