பக்கம்:கேரக்டர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இவ்வளவையும் அவர் ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருப்பார்.

புள்ளி சுப்புடு யாருடனாவது பேச ஆரம்பித்துவிட்டாலோ புள்ளி விவரங்கள் அலைமோதிக்கொண்டு வரும். அவர் தெருவில் போகும்போது, தெரிந்தவர்கள் யாராவது எதிரே வந்துவிட்டால், போதும்; "யாருடா நீ? சுப்பிரமணி மருமானாடா? உன் பேரு வேதாசலம் இல்லையோ? இனிஷியல் கே.எஸ்.தானேடா? 1943 ஏப்ரல் பதினேழிலே நீ பிறந்தே! அப்ப மெட்ராஸிலே ஒரே வெள்ளம்! ஏண்டா, உங்கப்பா ஓர் ஆஸ்டின் கார் வெச்சிண்டிருந்தாரே! அதாண்டா எம்.எஸ்.பி.4147. நைன்டீன் தர்ட்டி மாடல்! இப்போ அதை வித்துட்டாரா? காந்திநகர் ஸிக்ஸ்த் கிராஸ் ரோட்லே தானேடா உங்க வீடு? நூற்றுமுப்பத்தெட்டுங் கீழே மூணு இல்லே நம்பர்?

"ஏண்டா, வேலூர் மிஷன் ஆஸ்பத்திரியில் 1952 ஜூன் இருபதாம் தேதி உங்க அத்திம்பேருக்கு அபெண்டிஸிடிஸ் ஆபரேஷன் ஆச்சே? இப்ப பரவாயில்லையா? இப்ப என்னடா செய்யறார் அவர்? அவருக்கு இப்ப வயசு நாற்பத்து நாலு இருக்குமே? 1916ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் பதினாலாம் தேதி பிறந்தார்.

"ஏண்டா, அவருடைய சித்தப்பாபிள்ளை, அதாண்டா கோதண்டராமன் எஸ். எஸ். எல். ஸி. படிச்சிண்டிருந்தானே, இப்ப அவன் என்ன பண்றான்? படிப்பை அதோட நிறுத்திட்டானா? இல்லே, மேலே படிக்கிறானா? 6792 தானேடா எஸ்.எஸ்.எல்.ஸியில் அவன் பரீட்சை நம்பர்? சரி; இப்ப எங்கடா போறே?"

"கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்ஸிலே என் சிநேகிதர் ஒருத்தர் வரார். அவருக்கு மகாபலிபுரம் பார்க்கணுமாம். அவரைக் கூட்டிண்டு வர ஸ்டேஷனுக்குப் போறேன்."

"கிராண்ட் டிரங்கா? அது இன்னைக்கு நாலு மணி இருபது நிமிஷம் லேட்டாம். நான் சென்ட்ரல்லேருந்துதான் வரேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/6&oldid=1478052" இலிருந்து மீள்விக்கப்பட்டது